பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ♦ 155


பொன்னைப் பார்த்ததும், குருதேவர், அழகர்சாமி, நான் ஆகிய மூவரும் அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து தூரத்தில் போய் நின்றுவிட்டோம். உடனிருந்த பக்தர்களில் ஒருவரை அழைத்து, “தனியே போய் நின்றுகொண்டிருக்கும் அந்த மூவரையும் என் அருகில் அழைத்து வா” என்று அம்மா ஆணையிட, நாங்கள் அருகில் சென்றதும் குருதேவரை விளித்துப் பேசினாள் அன்னை. ‘மகனே, இந்தத் தங்கத்தைக் கண்டு, என்மேலேயே வெறுப்படைந்து தூரத்தில் போய் நின்றுவிட்டாய். நான் தங்கம் வரவழைப்பது இதுதான் முதல் தடவை, இந்தத் தங்கம் கீழே வீழ்கின்றவரை, ’ஓம்சக்தி ஓம்சக்தி’ என்று கூவிக்கொண்டிருப்பதையும் தங்கம் விழுந்த பிறகு ‘ஓம் சக்தி’ என்று கூறுவதையும் கேட்டாயல்லவா? தங்கத்தைப் பார்க்குமுன் இவர்கள் ‘ஓம்சக்தி’ உதட்டளவில்தான் நின்றது. தங்கத்தைப் பார்த்தபின் இந்த ‘ஓம் சக்தி’ குரல் அடிவயிற்றிலிருந்து வருவதைப் பார்த்தாயல்லவா? இதனை உனக்காகச் செய்யவில்லை” என்று ‘அம்மா’ பேசினார். பின்னர் என்னையும் அழகர்சாமியையும் சுட்டிக்காட்டி ‘நீங்கள் இருவரும் இங்கே வந்து மிகப் பெரிய பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. இப்பொழுது போய்விட்டு மீண்டும் வாருங்கள் என்று கூறிவிட்டார்.

இதன்பிறகு அடிக்கடி மருவத்தூர் செல்லத் தொடங்கி பெரும்பாலும் அங்கே தங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. வெற்றிடங்கள் எல்லாம் கட்டிடங்களாக உருவெடுக்கத் தொடங்கிவிட்டன. வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் அன்னை ‘அருள் வாக்கு’ச் சொல்வாள். எனவே பெரிதாக வளர்ந்தாலும் குருதேவரோ நானோ நாங்களாக உள்ளே சென்று கேட்டதில்லை. தேவை ஏற்படும்போதெல்லாம், எங்களை அழைத்து, இன்ன இன்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்று அன்னை ஆணையிடுவாள்.