பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160 ♦ நான் கண்ட பெரியவர்கள்


இந்த டாக்டர், நான் பேசியதையும் கூறினார். அந்த அம்மையார் சமாதானம் தெரிவித்தார். ஆனால் அந்த ஆண் மருத்துவர் ‘நான் சொல்ற கண்டிஷனுக்கெல்லாம் உட்பட்டால் இந்தப் பேஷண்ட் இங்கு இருக்கலாம். முதலாவது இங்கு இவர் செத்துவிட்டால் எங்கே செத்துவிட்டார் என்று சொல்லக்கூடாது. இங்கிருந்து யாரையும் டெலிபோனில் கூப்பிட்டு இந்தச் செய்தியையும் சொல்லக்கூடாது. உயிர் போனவுடன் இவரை எடுத்துச்செல்லுங்கள். இந்த ஹாஸ்பிடல் பேரே வரக் கூடாது. மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இந்த மருத்துவமனையில் உயிர் இழந்தார் என்ற செய்தி எந்தப் பேப்பரிலும் வரக்கூடாது. இதற்கெல்லாம் உட்பட்டால் இவரை இங்கேயே விட்டுப் விட்டுப் போங்கள்’ என்றார். அத்தனைக்கும் கட்டுப்பட்டு நோயாளியை ஒர் அறையில் சேர்த்துவிட்டு நாங்கள் திரும்பினோம். எனக்கு இருந்த கோபத்தில் நண்பரின் காரை வாங்கிகொண்டு நானே மருவத்தூருக்கு ஓட்டிச் சென்றேன். அருள்வாக்குத் தொடங்குகின்றவரை யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. ஆஸ்பத்திரியில் நடந்தது யாருக்கும் தெரியாது. அருள் வாக்குத் தொடங்கியவுடன் அன்னை என்னை அழைத்தாள். ‘மகனே, ஒரு மாதத்தில் தாடிக்காரனை நடத்திக் கூட்டிக்கிட்டு வரேன் என்று சொன்னாயில்லையா? உன்னைச் சொல்லவைத்ததே நான்தான்டா. அப்படியே நடக்கும் போ’ என்றாள், அன்னை. சரியாக ஒரு மாதம் கழித்து நாங்கள் மூவரும் மருத்துவமனைக்குச் சென்றோம். டாக்டர் சாந்தா அம்மையார் இன்முகத்துடன் எங்களை வரவேற்று ஆங்கிலத்தில் பின்வருமாறு கூறினார்: “எங்கள் மருத்துவமுறையில் பார்த்தால் இவர் இறந்து ஒரு மாதம் ஆகியிருக்க வேண்டும். ஓர் அற்புதம் (miracle) நிகழ்ந்துள்ளது. அவர் இப்போது நடக்கத் தயாராக உள்ளார். இன்னும் மூன்று நாட்களுக்கு இங்கேயே இருக்கட்டும். கொஞ்சம் கொஞ்சம் நடை பழகட்டும். பிறகு, நீங்கள் அழைத்துச்