பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ♦ 161


செல்லலாம்’ என்றார். மூன்று நாட்கள் கழித்து, நாங்களே சென்று குருதேவரைக் கார் வரை நடத்திக் காரில் அழைத்து வந்து விட்டோம். குருதேவரின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறியது.

ஒரு நாள் அன்னை என்னை அழைத்து ‘ஒரு பெரிய விழா நடத்தி, ஒரு பெரிய வெள்ளித்தட்டு வாங்கி, என் சார்பாக தாடிக்காரனிடம் கொடுத்துவிடு’ என்று அன்னை கட்டளையிட்டாள். பல்வேறு காரணங்களால் ஒரு சிறிய வெள்ளித்தட்டு வாங்கி, சிறிய விழாவை நடத்தி, குருதேவருக்கு அதைத் தந்தோம். பிறகு அவரை மதுரைக்கு அனுப்பிவிட்டோம். உடல்நிலை நன்றாகத் தேறி ஓரளவு நடையுடை மேற்கொண்டு மகள் வீட்டில் மதுரையில் இருந்தார் குருதேவர்.

ஒரு பெரிய கண்டத்தைத் தாண்டிவிட்டோம் என்று மனமகிழ்ச்சியோடு இருந்த என்னை ஒரு நாள் அன்னை அழைத்தாள். ‘மகனே, இன்ன தேதியில், இத்தனை மணிக்குத் தாடிக்காரன் என்னிடம் வரப்போகிறான். அந்தச் செய்தி உனக்கு வரும்பொழுது மதுரை செல்வதற்கு எந்த இரயிலும் இராது. முதல் நாளே நீயும் லோகநாதனும் கோயிலில்லிருந்து ஒரு குத்துவிளக்கை எடுத்துவைத்துக் கொண்டு தயாராக இருங்கள். யாரிடமும் இதுபற்றிப் பேசவேண்டாம். உனக்குச் செய்தி வந்ததும் நீயும் லோகநாதனும் விமானம் மூலமாவது மதுரை சென்று இந்த விளக்கை அவன் தலைமாட்டில் ஏற்றிவையுங்கள். பிறகு எல்லாக் காரியங்களையும் முடித்துக்கொண்டு வா’ என்று கூறினாள் அன்னை சொல்லியபடியே அனைத்தும் நடந்தேறின.

குருதேவர் நோயால் மிகவும் அவதிப்படும்போது அன்னையிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ‘அவர் இவ்வளவு துன்பப்படவேண்டுமா? அவர் துன்பத்தை நீ