பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174 ♦ நான் கண்ட பெரியவர்கள்


என்னை என்னவோ செய்தது. திருவாசகம் என் வாய் வழியாக வந்ததே தவிர என்னை ஒன்றும் மாற்றி விடவில்லை. ஆனால், கேட்டுக்கொண்டிருந்த அவர்கள் உள்ளத்தில் மிகப் பெரிய ஈடுபாட்டையும் உணர்வையும் எழுப்பிவிட்டதால் ஒரு சிறிதும் கூச்சப்படாமல் அவர்கள் தேம்பி அழுதுகொண்டே யிருந்ததை இறுதிவரை காணமுடிந்தது. அதன் எதிரொலி என்னையும் ஓரளவு தாக்கியது.

மறுநாள் திருவாசகப் பேச்சைத் தொடர்கையில் நானே ஓரளவு மாறிவிட்டேன். அன்றுதான் முன்வரிசையிலிருந்த அனைவரும், நம் ஊர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் போல, பட்டம் பெற்ற அரசுச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள், என்று தெரிந்து கொண்டேன். என்னையும் அறியாமல் மூன்றாம் நாளும் திருவாசகத்தைத் தொடர்ந்தேன். அப்பொழுதெல்லாம் இன்றுள்ளதுபோல ஒலிநாடாவோ, ஒலிநாடாப் பதிவுக்கருவியோ இல்லை. அதற்குப் பதிலாக, செப்புக்கம்பியில் ஒலிப்பதிவு செய்யும் கருவி என்பதே அபூர்வமாக இருந்தது. அதை நான் பார்த்ததும் இல்லை. எங்கே வைத்து என் பேச்சைப் பதிவு செய்யவைத்தார்கள் என்பதும் தெரியாது.

மூன்று நாள் திருவாசகத்தின் பேச்சு முடிந்தவுடன் அடுத்த நாள் காலை 9மணி அளவில் நான்கு ஐந்து பேர் கூட்டமாக வந்து, அருட்தந்தை கிங்ஸ்பரி என்னைப் பார்க்க வருவதாகக் கூறினார்கள். அந்தப் பேரைக் கேட்டவுடன் அவர் கிறித்துவப் பாதிரியார் என்பதை அறிந்துகொண்டேன். கிங்ஸ்பரி என்ற பெயராக இருப்பதால் ஒரு வேளை வெள்ளைக்காரராக இருக்கலாம் என்றும் நானே முடிவு செய்துகொண்டேன். வந்தவர்களைப் பார்த்து, ‘மாலை கூட்டம் வரை எனக்கு ஒரு பணியும் இல்லை, அவர் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்’