பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சர். கந்தையா வைத்தியநாதன் (இலங்கை) ♦ 175


என்று கூறினேன். வந்தவர்கள் மிகுந்த விநயத்துடன் ‘ஐயா அவர் மிகவும் வயதானவர். நோய்வாய்ப்பட்டுப் பல காலமாகப் படுக்கையிலே இருக்கிறார். எனவே, நீங்கள்தான் வரவேண்டும்’ என்றார்கள். அந்த நேரத்தில் தொலைபேசி மணி ஒலிக்கவே அதில் பேசிய ஒருவர் என்னைப் பார்த்து, ‘கந்தையா வைத்தியநாதன் உங்களைத்தான் அழைக்கிறார்’ என்றார். நான் சென்று ‘ஐயா என்ன விசேஷம்?’ என்று கேட்டவுடன் கந்தையா அவர்கள் அருட்தந்தை கிங்ஸ்பரி உங்கள் திருவாசகப் பேச்சைக் கேட்டுவிட்டு மிக மிக ஆவலாக உள்ளார். தயவுசெய்து இன்று மாலை 3 மணிக்கு அவரைச் சென்று காணுங்கள் என்றார். சரி என்று ஒப்புக்கொண்டேன். ஆனாலும் எனக்கு ஓர் ஐயம். படுக்கையை விட்டு எழ இயலாத ஒருவர், நான் பேசிய பேச்சை எவ்வாறு கேட்டிருக்க முடியும்?

என்றாலும், அன்று மாலை 3 மணியளவில் அவர் தங்கியிருந்த இடத்திற்கே சென்றோம். மிகப் பெரிய ஒரு ஹால். அதன் நடுவில் இருவர் படுக்கும் கட்டில் இரண்டை ஒன்றாகச் சேர்த்துப் போட்டிருந்தார்கள். அதன் மேல் ஒருவர் படுத்துக்கொண்டு மேலே பார்த்துக் கொண்டேயிருந்தார். அவருடைய வடிவத்தை முதன்முதலாகப் பார்த்த எனக்குக் கம்பநாடன் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. கும்பகர்ணனுடைய வடிவம் எவ்வளவு பெரியது என்பதைக் கூறவந்த கம்பன் ‘தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின், நாள் பல கழியுமால்’ என்பதே அந்தப் பாடல். படுத்திருந்த அவரின் ஒரு கை என் உடம்பின் முழு வடிவத்தைப் போல் இரண்டு பங்கு பெரிதாக இருந்தது.

இந்த வியப்புத் தணியுமுன், அவர் முகத்தின் அருகே என்னைக் கொண்டு அமரவைத்தார்கள். எவ்வித அசைவும்