பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சர். கந்தையா வைத்தியநாதன் (இலங்கை) ♦ 177


இறைவனடி சேர்ந்துவிட்டார். கொழும்புவில் நான் கண்ட மாமனிதருள் அவரும் ஒருவர்.

கந்தையாவுடன் கொண்டிருந்த நீண்ட காலப் பழக்கத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நினைவில் நிற்கின்றன. 1965 அல்லது 1966 ஆக இருக்கவேண்டும். தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையில் இணை இயக்குநகராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். எதிர்பாராமல் கந்தையா அவர்கள் என்னைப் பார்க்க வந்திருந்தார். திடீரென்று தம் பையைத் திறந்து நூறு ரூபாய்க் கட்டு இரண்டை எடுத்து மேஜையின் மேல் வைத்தார். நான் சிரித்துக்கொண்டே “கந்தையா, எங்கள் பழக்கம் உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். இந்தக் கட்டுக்களை மேஜையின்மேல் வைக்கக்கூடாது; மேஜையின் அடிப்புறமாக என்னிடம் தரவேண்டும்” என்று சொல்லிச் சிரித்தேன். அவரும் சிரித்தார். “அ.ச. திருஞானசம்பந்தப்பெருமான் பாடியருளிய மாதோட்ட நன்னகரில் எழுந்தருளியுள்ள திருக்கேதீச்சுரநாதர் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்யவேண்டி உள்ளது. எவ்வளவு செலவானாலும் கவலையில்லை. நல்ல ஸ்தபதிகள் இருபது அல்லது முப்பது பேரை எங்கள் ஊருக்கு அனுப்புங்கள். செலவு ஒரு பொருட்டே அல்ல. அவர்களை நன்கு கவனித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு வேண்டுமான ஊதியம் தருகிறோம். திருப்பணி முடியும்வரை அவர்கள் அங்கேயே இருக்கலாம். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். இவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்து இலங்கை ஹைகமிஷனில் இந்தப் பாஸ்போர்ட்டுகளை அனுப்பி என்னுடைய விருப்பத்தின்மேல் இவர்கள் அனுப்பப்படுகிறார்கள் என்று ஒரு கடிதம் எழுதி நீங்கள் அனுப்பிவிட்டால் போதும். ஓர் ஆண்டிற்கு விஸா தருவார்கள். அதற்குரிய செலவிற்கு இதனை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிப் போனார்.