பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சர். கந்தையா வைத்தியநாதன் (இலங்கை) ♦ 183


சேர்ந்திருக்கிறார். வண்டியிலிருந்து இறங்கியவுடன் பெரிய சத்தத்துடன் ஆங்கிலத்தில் என்னைப் பார்த்துப் பேசத் தொடங்கி விட்டார். “மிகவும் தேவையானதும் நோய் இன்னதென்று தெரிவிக்கக் கூடியதுமான அடையாளத்தைச் சொல்லி அனுப்பிவிட்டீர்கள். உடனடியாக இரத்தக்குழாய் உடைப்பு ‘Thrombosis’ என்பதைத் தெரிந்துகொண்டேன்” என்று உளறிவிட்டார்.

ஆங்கிலத்தில் சிறப்புப் பெற்ற அம்மையார் டாக்டரின் உரையாடலைக் கேட்டுத் திடீரென்று மயங்கி விழுந்து விட்டார். இருவருக்கும் உடனடி வைத்தியம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு வகையாக அம்மையாரை இயல்பு நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டார் மருத்துவர். உள்ளே ஒரு படுக்கையை விரித்து, கந்தையா அவர்களை நாங்கள் நால்வருமாகத் தூக்கி அப்படுக்கையில் கிடத்திவிட்டோம். இந்த நோய்க்கு எவ்வித மருந்தும் இல்லை என்று கூறிய மருத்துவர், மூலையில் அமர்ந்துவிட்டார். சகோதரியார் அவர்கள் தலைமாட்டில் அமர்ந்து கந்தையாவின் தலையைத் தூக்கித் தம் மடியில் கிடத்திக்கொண்டார். ஓர் அரை மணி ஆனதும் நான் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டு செய்தேன். கந்தையாவின் உடம்பில் எவ்விதச் சலனமும் இல்லை. ஆனால் ஒரு வேடிக்கை நடந்தது. கீழே கிடக்கும் அவர் கையைத் தூக்கிப் பக்கத்தில் வைக்க வேண்டுமானால் அந்தக் கையினாலேயே என் மணிக்கட்டைத் தடவிப்பார்ப்பார். சகோதரியார் மடியில் கிடந்திருந்தாலும் அவருடைய கை மணிக்கட்டைத் தடவிப் பார்ப்பார். இது ஏன் என்று அப்போது புரியவில்லை. பின்னர்த்தான் புரிந்தது. ஆண்களின் மணிக்கட்டிற்கும் பெண்களின் கை மணிக்கட்டிற்கும் வேறுபாடு உண்டு. ஆண்கள் கையில் மணிக்கட்டுத் தொடரும் இடத்தில் ஓர் எலும்பு சற்று