பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சர். கந்தையா வைத்தியநாதன் (இலங்கை) ♦ 185


விமானத்தில் அவரை எடுத்துக்கொண்டு ஒரு சிலர் சென்றனர். மிகச் சிறிய விமானம் ஆதலால், நாங்கள்கூட காரிலேயே கொழும்பிற்குப் புறப்பட்டோம். மறுநாள் காலை, கொழும்பு நகரமே கந்தையாவுக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கிவிட்டது.

ஊரின் நடுவே ஒரு சுடுகாடு. நான்கு புறமும் வீடுகள். மிகமிகப் பெரியவர்களைமட்டுமே அங்குத் தகனம் செய்வார்கள். மறுநாள் பத்து மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. வீட்டிலிருந்து சுமார் முக்கால் மைல் தூரம் நடந்து செல்லவேண்டியிருந்தது. தமிழகத்தில் இறந்தவர்களை எடுத்துச்செல்ல மூங்கிலில் பாடை கட்டுவது போல அந்த நாட்டில் செய்வதில்லை சவப்பெட்டியில் உடம்பை வைத்து நான்கு புறமும் வளையமிட்டு அந்த வளையத்தைப் பிடித்துக் கொண்டு நால்வர் செல்வர். பாதி வழி சென்றதும், பிரதம மந்திரியும், கவர்னர் ஜெனரலும் எதிரே வந்தனர். மரியாதை நிமித்தம், தலைப்பக்கத்தில் உள்ளே இரண்டு வளையங்களையும் அவர்கள் வாங்கிக் கொண்டனர். பத்தடி சென்றதும், ஏனையோர் அந்த வளையங்களை வாங்கிக்கொள்வது மரபு. அதேபோல இவர்களிடமும் வளையத்தை வாங்கிக்கொள்ள ஏனையோர் முயன்றபோது அதனைத் தர இருவரும் மறுத்துவிட்டனர். சுடுகாடு வரை தங்கள் அரிய நண்பரைத் தாங்களே சுமந்துவந்தனர்.

சுற்றிலும் வீடுகள் இருந்ததால் நான்கு புறங்களும் உயரமான கம்புகளை நட்டுத் துணியால் மூடப்பட்டு நடுவே சிதை அமைக்கப்பெற்றிருந்தது. உடலை அதன்மேல் வைத்தனர். பிரதமர் டட்லி சேனநாயகாவும் கவர்னர் ஜெனரலும் தங்கள் தலையணியை கையில் எடுத்து வைத்துக்கொண்டு மரியாதையாக நின்றனர்.