பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196 ♦ நான் கண்ட பெரியவர்கள்


என்று உத்தரவிட்டார். மகாதேவனிடம் திரும்பி, “உங்கள் ஆசைக்காக இதனைச் செய்யச் சொல்லிவிட்டேன். சுவாமிகள் எதையும் வாயிற் போட்டு நானறியேன். இருந்தாலும் இப்பலகாரத்தை எடுத்துக்கொண்டு சென்று உங்கள் விருப்பத்தை விண்ணப்பம் செய்யுங்கள் சுவாமிகள் மறுத்துவிட்டால் அதற்காக வருந்த வேண்டாம்” என்று கூறினார் நடேசனார்.

அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நான்கு மணிக்கு அமைச்சர் உட்பட நாங்கள் நால்வரும் கல்லூரிக்குப் புறப்படத் தயாராக இருந்தோம். சமையற்காரனுக்குத் திடீரென்று காக்கைவலி கண்டுவிட்டது. மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு நாங்கள் சொற்பொழிவுக்குச் சென்று விட்டோம். எங்களுக்கே உணவில்லாதபோது சுவாமிகளுக்கு நைவேத்தியம் கொண்டுசெல்வதென்பது நடக்காமல் போய்விட்டது. எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்ற மனவருத்தத்துடன் பத்து மணியளவில் நாங்கள் மூவரும் சுவாமிகளிடம் சென்று வீழ்ந்து வணங்கிவிட்டு நின்றோம். திடீரென்று சுவாமிகள் “அடே மகாதேவா யோகனுக்குச் சாப்பாடு போடவேண்டும் என்று நினைத்தாயல்லவா? கவலைப்படாதே” என்று கூறிவிட்டு மூவரையும் அமருமாறு செய்தார்கள். திடீரென்று குடிசையில் ஒரு மூலையைச் சுட்டிக் காட்டி, “டேய் பொடியா! அங்கே இடியப்பமும் சொதியும் இருக்கிறது. நான்கு இலைகள் இருக்கின்றன. எடுத்துப் போடு” என்றார்கள். சுவாமிகளுக்குப் படைக்கப்பட்ட இலையில் இருந்த இடியப்பத்தை நன்கு பிசைந்து கடுகளவு தம்முடைய திருவாயில் போட்டுக் கொண்டு எஞ்சியவற்றை உருண்டைகளாக உருட்டி எம் மூவர் இலைகளிலும் போட்டு உண்ணுமாறு பணித்தார்கள். இவை முடித்தபிறகு திடீரென்று “டேய் மகாதேவா! நீ என்ன செய்யப்போகிறாய் நாளைக்கு?”