பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தர் யோக சுவாமிகள் ♦ 197


என்றார்கள். அவர், தெ.பொ.மீ.யும், தாமும் மறுநாட்காலை விமானத்தில் சென்னை செல்லப்போவதாகக் கூறினார்கள். நான் கொழும்பு செல்லப்போவதாகக் கூறினேன். சுவாமிகள் சிரித்துக்கொண்டே, “அடே பொடியா, இவர்கள் இருவரும் பறவை மாதிரி கைகளை இறக்கையாகப் பரப்பிக்கொண்டு பறக்கப்போகிறர்கள், தெரியுமா?” என்றார்கள். எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது. இவர்களைப் போக வேண்டாமென்று சுவாமிகள் கூறுகின்றார்களா என்ற சந்தேகம். சுவாமிகளின் எதிரே வருகின்ற பெரியவர்கள் பிரதம மந்திரியிலிருந்து சாதாரணமனிதர்வரை யாரும் பேசுவதில்லை. தொடக்கத்திலிருந்தே அவர்கள் எதிரே பேசும் உரிமையை எனக்கு வழங்கியிருந்தார்கள். நான் பேசாது இருந்தாற்கூட, “டேய் பொடியா! ஏன் சும்மா இருக்கிறாய்? ஏதாவது சொல்” என்றார்கள். அந்த உரிமையை வைத்துக்கொண்டு, “இப்பொழுது இவர்கள் பயணத்தை நிறுத்திவிடட்டுமா?” என்று கேட்டேன். சுவாமிகள் சிரித்துக்கொண்டு “அவர்கள் போவதை யோகன் ஏன் நிறுத்த வேண்டும். பறவை போலப் பறப்பார்கள்” என்று கூறினார்கள். சுவாமிகளை விட்டு வரும்போது நடுநிசி ஆகிவிட்டது. நடந்தவற்றைக் கூறியவுடன் அமைச்சர் நடேசனார், இவர்களைப் போக வேண்டாமென்று எவ்வளவோ கூறிப் பார்த்தார். இருவரும் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் மறுநாட் காலை ஏழேகால் மணிக்கு இவர்கள் இருவரையும் வழியனுப்ப அமைச்சரும் நானும் சென்றோம். இருவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டனர். ஓடு பாதையின் தொடக்கத்திற்குச் சென்ற விமானம் பல முறை விசிறிகளைச் சுழல விட்டுக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. அது டக்கோட்டா விமானம். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒலிபெருக்கியில் பின்வருமாறு பேசப்பட்டது: “விமானம் பழுதடைந்து விட்டதால் இன்று சென்னை செல்லும் வாய்ப்பு இல்லை.