பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 ♦ நான் கண்ட பெரியவர்கள்


கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே, நாங்கள் விடியற்காலை 6 மணிக்கு அவர் வீட்டில் நின்றிருந்தோம். எங்களுக்குப் பின் பெரிய ‘கியூ’ நின்றது. 6 அல்லது 6.05 இருக்கும். டாக்டர் குருசாமி முதலியார் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்கள். முதலில் நின்றவர் டாக்டர் தியாகராஜன். அவர் டாக்டர் குருசாமி முதலியாரின் மாணவர். ஆதலால், “என்ன தியாகராஜா, என்ன விசேஷம்” என்று கேட்டார். நடந்ததையெல்லாம் சொல்லித் “தந்தையார் சிவபூசை செய்யும் கல்வியாளர். அவருக்கு உடல்நிலை சரியில்லை” என்று சொன்னார். ஒரு வினாடி கண்ணை மூடிக்கொண்டிருந்தார் டாக்டர் குருசாமி முதலியார். கண்ணைத் திறந்த அவர் பேசிய பேச்சுக்கள் இன்னும் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன. “தியாகராஜா, மார்ச் மாதம் 15-ம்தேதி போகப் போகிறார். அவருக்கு எதற்கப்பா வைத்தியம்? அவரே அதனை விரும்பமாட்டாரே. பைத்தியக்காரன் மாதிரி எதுவும் செய்யாதே, போ. அவரை அப்படியே அமைதியாக விட்டுவிடு” என்றார். பிறகு தியாகராஜன் எவ்வளவோ மன்றாடியும், “மார்ச் 15தான். இன்னும் 15 நாட்கள்தான். தேவையில்லாமல் எதற்கு அவரை வதை பண்ணுகிறீர்கள்? சும்மா விட்டுவிடு” என்று சொன்னார். அப்பொழுது “ஒரு டாக்டர் இப்படிப் பேசுவாரா?” என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உண்மைதான். ஆனால், வீட்டிற்கு வந்து “டாக்டர் குருசாமி முதலியாரை அழைத்து வரவா” என்று கேட்க, தந்தையார் “தேவையில்லை; விட்டுவிடு” என்றார். சரியாகக் குருசாமி முதலியார் கூறியதுபோல மார்ச் 15-ம்தேதிதான் தந்தையார் இறைவனடி சேர்ந்தார் என்று நினைக்கும் பொழுது, இந்த இரு மருத்துவப் பெருமக்களும் அதாவது ரத்தினவேல் சுப்பிரமணியம் அவர்களும் டாக்டர் குருசாமி முதலியார் அவர்களும் ஆன்மீகத் துறையில் எந்த அளவிற்கு