பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தர் யோக சுவாமிகள் ♦ 201


என்னாவது என்ற கவலை மனம் முழுவதையும் சூழ்ந்து கொண்டது. இந்த நிலையில் காரை ஆயத்தப்படுத்தச் சாவியைச் செருகிய நிலையில் அந்த மருத்துவ நிபுணர் வெளியே வந்து காரின் கதவைப் பிடித்துக்கொண்டு, “அ.ச.ஐயா! யோகருடைய சீடர்தானே தாங்கள்? அவரைப் போய்ப் பாருங்களேன்” என்றார். அந்த விநாடிவரை சுவாமிகளின் நினைவே என் மனத்தில் தோன்றவில்லை. அவர் கூறியவுடன் சுவாமிகளிடம் செல்லப் புறப்பட்டேன். அக்காலத்தில் பகலில் யாரும் சுவாமிகளிடம் செல்வதில்லை. அவருடைய தியானம் முதலியவற்றிற்கு இடையூறாக யாரும் போவதில்லை. மாலை ஆறுமணிக்கு மேல்தான் செல்வார்கள். அனைவருக்கும் தெரிந்த இந்தச் செய்தி எனக்கும் தெரிந்திருந்தது. எனவே, ஒரு விநாடி சிந்தித்து, உடனடியாகச் சுவாமிகளிடம் போவதே சரி என்ற முடிவிற்கு வந்தேன். நேரே வண்டியை ஓட்டிச் சென்று ஆசிரமத்தின் பக்கத்தில் நிறுத்திவிட்டு, எதிரே உள்ள கேணியில் கைகால்களைச் சுத்தம் செய்து மகானின் குடிலுக்குள் நுழைந்தேன். அடக்கமுடியாத அழுகையும், கண்ணிரும் என்னை ஆட்கொண்டிருந்தன. விழுந்து வணங்கிய நான் எழுந்திருக்க விரும்பவில்லை. ஒரிரு நிமிடங்கள் கழித்து, “ஏண்டா பொடியா. அந்த மருத்துவர் என்ன முருகன் என்ற நினைப்பா? எதற்காக அவரிடம் போனாய்?” என்று திட்டியதோடல்லாமல் என்னுடைய அறியாமை பற்றியும் வெகுவாக ஏசினார்கள். கடைசியில் “பொடியா இங்கே உட்கார்” என்று நான் வழக்கமாக அமரும் இடத்தைக் காட்டினார்கள். அப்பொழுது இருந்த மனநிலையில் சுவாமிகள் பேசியது எதுவும் என் மனத்திற் படியவில்லை. ஏதேதோ பேசிவிட்டு அரைமணி கழித்து அவர்கள் சொல்லிய வார்த்தைகளை ஏறத்தாழ அப்படியே கீழே தந்துள்ளேன். ஒரு சில சொற்கள் முன்பின்னாக இருக்கலாம். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அச்சொற்களை