பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சி மகாப்பெரியவர் ♦ 211


யாரும் கேட்டதில்லை. அவர்கள் கேட்டதெல்லாம் ‘பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவேண்டும், பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும், வெளிநாடு போகவேண்டும், வைத்த தொழில் விருத்தியாக வேண்டும்’ என்ற முறையில்தான் இந்தப் பக்த கோடிகள் வேண்டிக் கொண்டனர். அதற்கு ஸ்ரீ சந்திரசேகரர் என்ற சங்கராச்சாரியர் சுவாமிகளே போதுமானவர். உள்ளே வளர்ந்துள்ள மகாமகாப்பெரியவரை ஒருவர் இருவர் அறிந்துகொண்டார் என்றால், அத்தகையவர்கள் அவரிடம் சென்று மேலே சொன்ன அற்ப விஷயங்களைக் கூறி ஆசி வேண்ட மாட்டார்கள். அரசனிடம் சென்று “டீ குடிப்பதற்கு ஐந்து ரூபாய் வேண்டும்” என்று கேட்பது நம்முடைய அறியாமை நிறைந்த அற்பத்தனமாகும். நம்மையொத்த நண்பர்களை, நம்மை விட வசதி படைத்தவர்களைக் காணும்பொழுது அவர்களிடம் பத்து ரூபாய் கேட்பதில் தவறில்லை. அவர்கள் கொடுக்க முடிந்தது அவ்வளவுதான். ஆனால், அரசனிடம் சென்று, பாதி அரசை அல்லவா கேட்க வேண்டும்? அதைக் கொடுக்கும் ஆற்றலும், வன்மையும், வள்ளன்மையும் அவன்பால் உண்டு. யாரிடம் எதைக் கேட்க வேண்டும் என்று தெரிந்துகொள்வதே அறிவுடைமையின் அடையாளம்.

காஞ்சி சங்கர மடத்தில் அதிபராக விளங்கிய சந்திரசேகரர் என்ற சுவாமிகளிடம் மேலே கூறிய சாதாரண விஷயங்களைக் கேட்டு ஆசி பெறுவதில் தவறில்லை. ஆனால், ஐந்தடி உயரமுள்ளவரும் நலிந்து மெலிந்தவருமான அவருக்குள்ளே ஐந்தாயிரம் கிலோ மீட்டர் உயரமுள்ளவரும், எல்லா உயிர்களையும் நேசிப்பவரும் தம்மை நாடி வந்தவர்கள் எது கேட்டாலும் தரக்கூடியவருமாகிய சந்திரசேகரர் மறைவாக நின்றிருந்தார். அவருடைய கண்ணைப் பார்த்தால் ஒரு வேளை அதை விளங்கிக்கொண்டிருக்கலாம்.