பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212 ♦ நான் கண்ட பெரியவர்கள்



ஸ்ரீராமனை எத்தனையோ பேர் பார்த்தார்கள். சிலர் தோள் கண்டார். சிலர் தாள் கண்டார்; சிலர் தடக் கை கண்டார். முடியக் கண்டார் யாரும் இலர் என்கிறான் கம்பன். ஆனால் ஒரே ஒருவன் இதற்கு விலக்கு அத்துணைப் பேரும் கை கால் தோள் ஆகியவற்றைப் பார்க்க அனுமன் ஒருவன் மட்டும் தோளையும் தாளையும் நோக்காமல் இராமனுடைய கண்களைப் பார்த்தான். அவன் யார் என்பதைக் கணப்பொழுதில் அறிந்துகொண்டான். அதே போல இராகவனும் அனுமனின் கண்களைப் பார்த்தே அவன் யார் என்பதை அறிந்துகொண்டான். உள்ளே வளர்ந்திருப்பதைக் காட்டும் கண்ணாடி கண்கள் என்பர். மகாப்பெரியவரைத் தரிசிக்கச் சென்ற எத்தனை பேர் அவர் கண்களைப் பார்த்தார்கள் என்பது தெரியாது. பார்த்திருந்தால் உள்ளே வளர்ந்திருப்பவரை ஓரளவு கண்டிருக்கமுடியும்.

1957-இல் நான் சென்னை வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்பொழுது நிலைய இயக்குநராக இருந்த டாக்டர் வி.கே.நாராயண மேனன் “காஞ்சி மடத்துப் பெரியவர் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளார்; தினம் மாலை 5, 6 மணி அளவில் அருளுரை பேசுகின்றார். நீங்கள் சென்று ஒலிப்பதிவு செய்துகொண்டு வாருங்கள்” என்று வேண்டினார். நாடகத் துறையில் தயாரிப்பாளராக இருந்த என்னுடைய பணியின் எல்லையில் வருவதன்று இப்பணி. ஆனால், ஒலிப்பதிவு செய்யப்போகின்றவர்கள் பெரியவரின் அருமை பெருமையைத் தெரிந்தவர்களாக இருந்தால் நலம் என்ற கருத்தில்தான் என்னைப் போகுமாறு வேண்டினார். இப்போது இருப்பதுபோலக், கையடக்கமான டேப் ரிகார்டர் அந்தக் காலத்தில் இல்லை. 10 கிலோ எடையுள்ள ஒரு டேப்ரிக்கார்டர்; அதைத் தூக்கிவர ஒரு பணியாளர். எனவே அதை ஒரு மூலையில் வைத்துவிட்டு அதனோடு இரண்டு ஒலிவாங்கிகளை இணைத்துவிட்டு ஒலிவாங்கிகளைக்