பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காஞ்சி மகாப்பெரியவர் ♦ 213


கையில் எடுத்துக்கொண்டு, பெரியவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மெல்லச் சென்றேன். சட்டை முதலியவற்றைக் கழற்றிவிட்டபடியால் என் உடம்பில் பூணூல் இல்லை என்பதை அறிந்த பெரியவரின் பக்கத்தில் இருக்கும் ஒருவர் நான் பக்கத்தில் வரக்கூடாது என்று பலமாக ஆட்சேபித்து விட்டு, என்னுடைய உதவியாளர் சீதாராமய்யர் என்பவரை அழைத்துப் பெரியவரிடம் வைக்குமாறு பணித்தார். அவர் பேசிய முறையும் நடந்து கொண்ட முறையும் எனக்குப் பிடிக்காததால் பேச்சை ஒலிப்பதிவு செய்யாமல் அனைத்தையும் சுருட்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டேன். அன்றிலிருந்து என் மனத்திடை ஒரு நெருடல் இருந்துவந்ததாதலின் பெரியவரை எங்கும் சென்று பார்த்ததேயில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக, காஞ்சியில் தங்கி, மூன்று ஆண்டுகள் பணி புரிந்தபோதும் பெரியவரைச் சென்று பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றவில்லை.

இந்த நிலையில் என் குடும்பத்திற்கும் எனக்கும் இரண்டு அற்புதங்கள் மகாப்பெரியவரின் மூலமாக நடைபெற்றன. ஒன்று, என் பெயரன் ஒருத்தனுக்கு ஆசிவழங்கி ஆயுள் நீடிக்குமாறு செய்தார்.

மற்றொன்று, 1993ஆம் ஆண்டு சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தை நிறுவி அதன் மூலமாகப் பெரிய புராணத்தைத் தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்களின் குறிப்புரையோடு பதிப்பிக்க முடிவு செய்தேன். சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கும் பெரிய புராணத்தை அச்சிடுவதற்கும் ஆகும் செலவு முழுவதையும் தாமே தருவதாகக் கூறி, முன் பணமாக ஒரு லட்சத்து இருபதினாயிரம் ரூபாயையும் அப்பொழுதே தந்துவிட்டார் ஒரு வள்ளல், அவர்தான் பெங்களுரைச் சேர்ந்த தமிழறிஞர், பெரும் செல்வர். எம். வி. ஜெயராமன் அவர்கள். இது நடைபெற்றது ஏப்ரல் மாதக் கடைசி வாரத்தில்,