பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



216 ♦ நான் கண்ட பெரியவர்கள்


சால்வையை எடுத்து, மகாப்பெரியவரின் திருப்பாதம் முதல் கழுத்துவரை போர்த்தினார், அவர். ஓரிரு நிமிடங்கள் கழித்துப் போர்த்தியிருந்த சால்வையை எடுத்து அந்தக் கரியவர் என்மீது போர்த்தினார். இவை அனைத்தும் நடைபெறுகின்றபோது, அப்பொழுது பாலப்பெரியவர் என்று அழைக்கப்பெற்ற ஸ்ரீலஸ்ரீ விஜயேந்திரர் மகாப்பெரியவரின் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.

‘ஆசி கிடைத்துவிட்டது’ என்ற மகிழ்ச்சியில் ஜெயசெந்தில்நாதன் மகாப்பெரியவரிடம் நன்றி கூறிவிட்டு எங்களை அழைத்துக்கொண்டு லாட்ஜுக்குத் திரும்பிவிட்டார். நடந்ததை விவரமாகக் கூறக் கேட்ட லாட்ஜ் உரிமையாளர் நடராசையர் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளானார். “எத்தனையோ ஆண்டுகளாக இந்த ஊரில் இருக்கிறேன். மடத்தில் நடப்பவையெல்லாம் எனக்குத் தெரியும். இதுவரை ஒரே ஒருவரைத்தவிர வேறு யாருக்கும் இது நடைபெறவில்லை. முதலாவதாக இதனைப் பெற்றவர், இந்நாட்டின் பிரதம மந்திரியாக உள்ள திரு. பி. வி. நரசிம்ம ராவ் அவர்கள். அடுத்தபடியாக உங்களுக்குத்தான் இப்படிப் போர்த்தப்பட்டிருக்கிறது” என்று வியந்து கூறினார். இதன் தத்துவம் என்ன என்பதைப்பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை.

மாதங்கள் சில சென்றன. உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். நடராஜன் அவர்களைத் தலைவராகக் கொண்டு, நூலையும் வெளியிட்டு, ஆகஸ்டு மாதம் இரண்டாம் வாரத்தில் சேக்கிழார் விழாவையும் நடத்தி விட்டோம்.

மாதங்கள் பல உருண்டன. மகாப்பெரியவர் அவர்களும் மகா சமாதி அடைந்துவிட்டார். சில மாதங்கள் கழித்துப் பெரிய புராணம் அச்சிட்ட பிரதிகள் இரண்டை எடுத்துக்கொண்டு, அப்பொழுது பட்டமேற்றுப் பீடாதிபதியாக இருக்கும் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி