பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12 ♦ நான் கண்ட பெரியவர்கள்


என்னவென்றால், பெரும்பாலும் இவர் சிவபூசை முடித்த பிறகு தோத்திரப் பாடல்களை அவராக ஒரு முறையில் தொகுத்துப் பாடுவார். அதாவது எந்தப் பாட்டும் முழுதாக இராது. திருவாசகத்தில் பாட ஆரம்பிப்பார். திருவாசகத்தின் போற்றித் திருஅகவல் பகுதியில் ஒரு மாதம் இரண்டு மாதம் என்று கருவுற்ற உயிர் படாத பாடு பட்டு இறுதியாக 10ஆம் மாதத்தில் பிறப்பது, பிறகு அது வளர்கின்ற முறை, தொடர்ந்து ’தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவிலாததோர் பொருளது கருதலும்’ என்பதுவரை பாடி அதோடு நிறுத்திக்கொள்வார். பிறகு தேவாரத்தில் இரண்டு பாடல்கள், மறுபடியும் திருவாசகத்தில் ஒரு சில பாடல்கள், இப்படிச் சேர்த்துச் சேர்த்து ஆன்ம யாத்திரையாக அவர் பாடும்முறை அமையும். அது முடிந்த பிறகு கடைசியாகச் சிவபூசையின் முடிவில் அவர் சொல்லுகிற பாட்டு, பட்டினத்துப் பிள்ளையினுடைய ‘கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்’ என்கிற பாடலாகும். இது பல ஆண்டுகளாக நாங்கள் கேட்டுக் கேட்டுப் பழகிப் போயிருந்த ஒன்று. இப்பொழுது அதை வழக்கம்போல் பாடிக்கொண்டு வந்த அவர், கடைசியாகக் ‘கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்’ என்ற பாடலைத் தொடங்கி ‘எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் இறைவா!’ என்று சொன்னவுடன் அவருடைய ஆவி அடங்கிவிட்டது. அதை டாக்டர் தியாகராஜன், நாங்கள் அத்தனை பேரும் பார்த்துக்கொண்டேயிருந்தோம் ஒரு வளர்ச்சியுள்ள ஆன்மா இறுதியாகப் போகும்பொழுது இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மன நிலையில் இறையனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற அதே நிலையில் உயிர் பிரிவது என்பது போற்றத் தகுந்த ஒன்று என்பதை நாங்கள் அப்பொழுதுதான் அறிந்தோம்.