பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்றைய சொற்பொழிவாளர்கள் ♦ 219


பெற்றிருந்தார். அக்காலத்தில் அவரை அடுத்துப் பேசுவது கடினம் என்று பலர் நினைத்தனர்.

டி.கே.சிதம்பரநாத முதலியார்: அந்நாளில் பெளராணிகர் கைகளில் சிக்கியிருந்த கம்பனை விடுதலை செய்தவர்கள் இருவர். கம்பன் கழகங்களை நிறுவிக் கம்பனை மேடைக்குக் கொண்டுவந்தவர் சா.கணேசன் அவர்கள். இராமாயணம் என்றால் வால்மீகிதான் என்று நினைத்திருந்த ஒரு திருக்கூட்டத்தாரை மடக்கிப் பிடித்துக் கம்பன் பெருமையை உணருமாறு செய்தவர் டி.கே.சி. அவர்கள். வாழ்நாள் முழுவதையும் கம்பனுக்காகவே செலவிட்டவர் இவர் பாடல்களை எடுத்து ஆய்ந்து அதிலுள்ள நுணுக்கங்கள், இலக்கணச் சிறப்புகள், பாடல் அமைப்பு முறை என்பவற்றைப் பேசும் தமிழறிஞர்கள் போன்றவர் அல்லர் இவர் ஒரு பாடலை, ஏறத்தாழ ஆறு ஏழு முறை படிப்பார். கேட்பவர்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய சிந்தனைகளைப் பெறுவர். அதற்குக் காரணம் டி.கே.சி. அவர்கள் அந்தப் பாடல்களைப் படிக்கும் முறைதான். பெரும்பாலும் பேச்சாளர்கள் கேட்கின்றவர்கள் முகபாவங்களைப் பார்த்துக்கொண்டே பேசுவர். எவ்வளவு சிறந்த பேச்சாளராயினும் பேசுவோர் தம்மை மறப்பதேயில்லை. டி.கே.சி. அவர்களுக்கு அவர் பேச்சை கேட்பவர்கள் இரண்டு பேராயினும், இருநூறு பேராயினும் ஒன்றுதான். முதன்முறை பாட்டைப் படிக்கும்போது கம்பன் பாடல், அதனைப் படிக்கும் டி.கே.சி, அதனைக் கேட்போர் என்ற மூன்றிருக்கும். இரண்டு அல்லது மூன்றாம் முறை படிக்கும்போது டி.கே.சி. இருக்கமாட்டார்; கேட்போரும் இருக்கமாட்டார்கள்; பாடல் ஒன்றுமட்டுமே இருக்கும் அந்தப் பாடலில் டி.கே.சி. தம்மை மறக்கும்போது, எதிரேயுள்ளவர்கள் தங்களை மறப்பதில் அதிசயமில்லை, தமிழகத்தின் தலைசிறந்த