பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்றைய சொற்பொழிவாளர்கள் ♦ 221



தோழர் எஸ். இராமகிருஷ்ணன்: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படிக்கும் காலத்தில் எனக்கு நான்கு ஆண்டுகள் கீழ்வகுப்பில் படித்துவந்தார். ஆங்கிலம், தமிழ் என்ற இரண்டிலும் மாபெரும் புலமை பெற்றவர். இரண்டு மொழிகளிலும் மிகச்சிறந்த பேச்சாளர். காரைக்குடிக் கம்பன் கழகத்தில் விடாமல் பங்குபற்றியவர், பட்டிமண்டபத்தில் அணித்தலைவராக இருந்து தம் புலமையைக் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் வெளிப்படுத்தியவர்.

1944இல் காரைக்குடி கம்பன் கழகத்தில் பட்டி மண்டபத்தைப் புதிதாக, முதன்முறையாகத் தொடங்கியதிலிருந்து மேலே கூறிய இவரும் நானும் தவறாமல் பங்கேற்று வந்தோம். பட்டிமண்டபம் என்றால் பேராசிரியர் இராதாகிருஷ்ணன், தோழர் இராம கிருஷ்ணன் (S.R.K), அ.ச.ஞா. என்ற மூவர்தான் அணித்தலைமை. இருபது இருபத்திரண்டு ஆண்டுகள் இந்த மும்முனைக் கூட்டு முறியாமல் நடைபெற்றுவந்தது. இதன் பயனாகக் காரைக்குடி அல்லாத பிற ஊர்களிலும் பட்டி மண்டபம் என்றால் நாங்கள் மூவருமே அணித்தலைமை ஏற்றிருந்தோம்.

காரைக்குடிக் கம்பன் கழகத்தில் தொடக்க காலந்தொட்டு கவியரங்கம் என்றொரு தனிப்பகுதி நடைபெற்று வந்தது. சொற்பொழிவுப் பகுதிகளில் மட்டுமல்லாமல் கவியரங்கப் பகுதியிலும் எல்லாச் சமயத்தினரும் பங்கு கொண்டனர். அந்நாட்களில் ஒரு முறை கவிக்கோ அப்துல் இரகுமான் கவியரங்கத்தில் இடம்பெற்றிருந்தார், அவர் பிரபலமடையாத காலமது. ஒரு சுவையான நிகழ்ச்சி. கவியரங்கம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னர்ப் பல நாமங்களைத் தரித்திருந்த வைணவப் பெரியவர் ஒருவர் சா. கணேசனைப் பார்த்து ‘இது என்ன நியாயம்? அப்துல் ரகுமான் என்ற