பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28. நான் காணும் இளையர்


வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் நான், கடந்துவிட்ட எண்பது ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிறேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க., தெ.பொ.மீ, அ.மு.சி., ம.ரா.குமாரசாமிப்பிள்ளை முதலிய பெரும் பேச்சாளர்கள் பலரைக் கண்டும் கேட்டும் இருக்கிறேன்.

1960 முதல் 1990 வரை தமிழகப் பேச்சாளர் குழுவில் ஒரு தொய்வு ஏற்பட்டிருந்தது உண்மைதான். ஆனால் 1980 முதல் அங்கங்கே சில நல்ல கல்வியாளர்கள் பேச்சாளர்கள் தோன்றித் திகழ்கின்றனர். நினைவில் வரும் அளவில் கீழே ஒரு பட்டியலைத் தந்துள்ளேன். இப்பட்டியலில் சிலருடைய பெயர்கள் விடுபட்டிருக்கலாம். இப்பட்டியலைக்கூட மூன்றாகப் பிரிக்கலாம்.

தமிழை ஆழமாகப் பயின்று கற்பிக்கும் ஆற்றலும் நூலெழுதும் ஆற்றலும் ஓரளவு பேசும் ஆற்றலும் உடையவரை ஒரு தொகுப்பினராகக் கொள்ளலாம்.

நூல்கள் அதிகம் எழுதாமல் தமிழை பயின்று நல்ல பேச்சாளராக விளங்குபவரை ஒரு தொகுப்பினராகக் கொள்ளலாம்.

முறையாகத் தமிழைப் பயிலாமல் ஆர்வம் காரணமாக மிகமிக ஆழமாகத் தமிழையும் தமிழ்நூல்களையும் பயின்று சிறந்த சொற்பொழிவாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் விளங்கும், பிறதுறைகளில் உயர்பதவி வகிக்கும் இவர்களை மற்றொரு தொகுப்பினராகக் கொள்ளலாம்.