பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்காத நினைவுகள்- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ♦ 241


பிள்ளையவர்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் என்பதை அன்றைய கச்சேரியின்போது நாங்கள் அறிந்து கொண்டோம்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்

நாதஸ்வரச் சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளை அவர்கள் வானொலிக்கு வருகிறேன் என்று ஒத்துக் கொண்ட பிறகு, இயக்குநர் சங்கரன் அவர்களுக்குப் புதியதோர் ஆசை பிறந்தது. இராஜரத்தினம் பிள்ளை அவர்களைப்போலவே கலைவாணரும் ஏதோ ஒரு காரணம்பற்றி வானொலிக்கு வருவதையே நிறுத்திவிட்டிருந்தார். இரண்டாண்டுகளாக எவ்வளவு அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். திரு. பிள்ளையவர்கள் ஒத்துக்கொண்டார் ஆதலின், என்னை வைத்துக்கொண்டே கலைவாணரையும் வானொலிக்குத் திரும்பிவருமாறு அழைக்கலாமென முடிவுசெய்தார் சங்கரன்,

நிலைய இயக்குநர் டாக்டர் மேனன், துணை இயக்குநர் சங்கரன், நான் ஆகிய மூவரும் சேர்ந்து இது பற்றிச் சிந்தித்தோம். திரு. பிள்ளையவர்கள் நீண்ட நாளைக்குப் பிறகு வானொலிக்கு வருவதாக ஒத்துக் கொண்டுள்ளார் என்பதை விவரமாக எடுத்துச்சொல்லிக் கலைவாணரை அழைப்பது என்று முடிவுசெய்தோம்.

வழக்கம்போல் திரு. சங்கரனும் நானும் கலைவாணரைச் சந்திக்கச் சென்றோம். தமக்கேயுரிய முறையில் சிரித்த முகத்தோடு திரு.சங்கரனை வரவேற்ற கலைவாணர், என்னை யாரென்று அறிமுகம் செய்து வைக்குமாறு திரு.சங்கரனைக் கேட்டார். சங்கரன் அவர்கள் நாதஸ்வரச் சக்கரவர்த்திக்கும் எனக்கும் நாகர்கோவிலில் ஏற்பட்ட தொடர்பு, அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு திரு. பிள்ளையவர்களிடம் சென்றது, விசயமறிந்த