பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ வாலையானந்த சுவாமிகள் ♦ 19


தந்தையாரையும் பிள்ளையையும் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பிப் போய்விடுமாறு பணித்துவிட்டார் சுவாமிகள். அவர்கள் போன பிறகு, கதவைச் சாத்திவிட்டு என் அருகில் வந்த சுவாமிகள், திருநீற்றை எடுத்து ஏதோ ஜபித்துவிட்டு என் கழுத்தைச் சுற்றிப் பூசிவிட்டார்கள். பிறகு சற்று நேரம் சுவாமிகள் என் அருகிலேயே இருந்தார்கள். பின்னர் நான் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்தவுடன், என் தந்தையாரும் பிள்ளையவர்களும், சுவாமிகள் இருக்கும் இடத்திற்கு வந்து என்னையும் கண்டார்கள்; சுவாமிகளையும் கண்டார்கள். இயல்பாக மூச்சவிட்டுக் கொண்டிருந்தேன்; கழுத்தில் வீக்கமும் இல்லை. என்ன நிகழ்ந்தது என்று தந்தையாரும் கேட்கவில்லை; சுவாமிகளும் ஒன்றும் சொல்லவில்லை. மறுபடியும் எனக்குத் திருநீறு அணிவித்துவிட்டு, சுவாமிகள் சொன்ன சொற்கள் 75ஆண்டுகள் கழித்து இன்னமும் என் மனத்தைவிட்டு அகலவில்லை. “சரவணா, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். இன்றிலிருந்து ஓர் ஆண்டிற்கு இவனை எந்தக் கூட்டத்திற்கும் அழைத்துப் போகாதே; எந்த மேடையிலும் ஏறிப் பேச விடாதே; யார் அழைத்தாலும் மறுத்துவிடு” என்று கூறிவிட்டு, என்னை அழைத்துப்போகுமாறு என் தந்தைக்குக் கட்டளை இட்டார். என் தந்தையாரும் அக்கட்டளைக்கிணங்க 1926ஆம் ஆண்டு நவம்பர் 10 வரை எந்தக் கூட்டத்திற்கும் என்னை அழைத்துச் செல்லவில்லை.

நான் கண்ட பெரியவர்களுள் என் மனத்தில் முதலில் நிற்பவர் ஸ்ரீலஸ்ரீ வாலையானந்த சுவாமிகள் ஆவார்.