பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


4. திருப்பதி ஐயா


1927ஆம் 28ஆம் ஆண்டுகளில் திருச்சியில் ஜாபர் சாஹிப் தெருவில் குடியிருந்தோம். திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதும் பணியில் தந்தையார் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் காலை பத்து மணியிருக்கும். நாலடி உயரமேயுள்ளவரும் மிக மெல்லிய உடலமைப்பு உடையவரும் ஒற்றை வேட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு, மற்றொரு வேட்டியை மடித்துக் கட்கத்தில் வைத்துக் கொண்டவரும் ஆகிய ஒருவர், வீட்டினுள் நுழைந்தார். தந்தையார் மாடியில் இருந்தார்; தாயார் சமையலில் ஈடுபட்டு உள்ளேயிருந்தார். சிறுபிள்ளைத்தனத்துடன் ‘நீங்க ஆரு? ஆரைப் பார்க்கணும்?‘ என்று துடுக்காகவே கேட்டுவிட்டேன். அந்தப் பெரியவர் சிரித்துக்கொண்டே “அப்பாகிட்டை போய் ... திருப்பதி வந்திருக்கிறான்னு சொல்லு” என்றார். விரைவாக ஓடிச்சென்ற நான் தந்தையாரிடம் சொன்னேன்.

திருப்பதி என்ற பெயரைக் கேட்டவுடன், தந்தையாருடைய முகம் மலர்ந்தது. எழுதுகோல் முதலியவற்றை அப்படியே போட்டுவிட்டு வெகுவேகமாகக் கீழிறிங்கி வந்தார். அதற்குள் என் தாயாரும் வெளியே வர, இருவரும் நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வந்தவரை வணங்கினார்கள். என்ன காரணத்தாலோ வணங்க வேண்டுமென்ற எண்ணம் என் மனத்தில் தோன்றவில்லை. வணங்கி எழுந்த தந்தையார் “சாமிகளை வணங்குடா” என்று கட்டளையிட்டார்.

சாமிகள் என்றால் காசாயம் தரித்து, உருத்திராக்கம் அணிந்து, பாதக்குறட்டுக் கட்டையின்மேல் ஏறிக்கொண்டு