பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


5. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.


இன்று கப்பலோட்டிய தமிழன் என்றால், பலரும் அறிந்திருப்பர். 1931ஆம் ஆண்டு தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் பேசுவதற்காக என் தந்தையாரும் நானும் சென்றிருந்தோம். ஒருவருடைய வீட்டில் தங்கியிருந்தோம். அந்த வீட்டுக்காரரிடம் பலரும் மரியாதையுடன் பேசினார்கள் என்றாலும் எனக்கு அவர்பால் அப்போது ஈடுபாடு ஏற்படவில்லை. காரணம், ஒரு வாரமாக கூடி ஷவரம் செய்யாத முகத்துடன் வயதில் மூத்த பெரியவராகக் காட்சியளித்தார். அவர் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் எழாததால் என் தந்தையாரிடமும் “அந்த வீட்டுக்காரர் யார்” என்று நான் கேட்கவில்லை. திடீரென்று ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்ததால், என் தந்தையாரிடம் மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். திண்ணையில் அமர்ந்திருந்த அந்த வீட்டுக்காரர், “டேய் பையா! நீ எங்கே போகிறாய்?” என்று வினவினார். சொற்பொழிவு செய்யவந்த என்னை ‘டேய் பையா’ என்று அழைத்ததால் எனக்குக் கோபம். மிகவும் விறைப்பாக ‘ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரப்போகிறேன்’ என்றேன். “சரி பையா, திரும்பி வர இந்த வீட்டு அடையாளம், தெரு எல்லாம் தெரியுமா?” என்று கேட்டார். அப்போதுதான் என்னுடைய அறியாமை எனக்கே புலப்பட்டது. ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதி என் சட்டைப் பைக்குள் நுழைத்தார். “மீட்டு வரத் தெரியவில்லையானால் அந்தக் காகிதத்தைக் காட்டு” என்றார். அவர்மீதிருந்த கோபம் அப்போதும் தணியவில்லை. ஆதலால், அந்தக் காகிதத்தில் என்ன எழுதியிருந்தார் என்று