பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 ♦ நான் கண்ட பெரியவர்கள்


பார்க்கவேயில்லை. ஊரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு கடற்கரையை அடைந்தேன். அங்கு நீராவிப் படகு ஒன்று நின்றுகொண்டிருந்தது. காவல் எதுவும் இல்லாமையால் படகினுள் சென்று அந்தக் கப்பலில் ஏறி அடியிலிருந்த எந்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஓர் இரும்புக்கரம் என் கழுத்தைப் பிடித்தது. “யார் நீ? எங்கு வந்தாய்? யாரைக் கேட்டு வந்தாய்?” என்று கேட்டார். தக்க பதில் சொல்லத் தெரியாததால் என் பைக்குள் இருந்த காகிதத்தை எடுத்துக் காட்டினேன். என்ன மாற்றம்! உடனே எனக்கு ராஜ மரியாதை, கழுத்தைப் பிடித்த அந்தப் படகுத் தலைவர் எந்திரங்களைக் காணவேண்டும் என்ற என் ஆவலை அறிந்து தாமே என்னைக் கூட்டிக்கொண்டு சென்று ஒவ்வொரு பகுதியாகக் காட்டினார். கடைசியில், “இதில் சவாரி செய்ய விருப்பமா?” என்று கேட்டார். “ஆம்” என்றவுடன் இந்தப் பையனுக்காக அந்தப் படகு ஒரு அரை மைல் தூரம் சென்று திரும்பியது. எனக்கோ வியப்புத் தாங்கவில்லை. காகிதத்தில் என்ன எழுதியிருந்தது என்று தெரியவும் இல்லை. ஆனால், அந்தத் துண்டுக் காகிதத்தின் மதிப்பு எவ்வளவு என்பதைக் கண்கூடாகக் கண்டுகொண்டேன். வந்தவுடன் ஒரு பணியாளரை அழைத்து “இந்தத் தம்பியை ஐயா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வா” என்றுமட்டுமே கூறினார். ஐயா என்று கூறினாரே தவிர, எவ்விதப் பெயரையும் கூறவில்லை. அந்தப் படகுத் தலைவர், தம்மிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அந்தப் பணியாளரிடம் கொடுத்து, “இன்ன கடையில் பலகாரம் வாங்கிக் கொடு” என்று சொன்னார். ஓர் அடி உயரமுள்ள பொட்டலத்தில் பலகாரம் வாங்கிக்கொண்டு அந்தப் பணியாளர் என்னை அழைத்துச் சென்றார். இன்னும் அந்த ‘ஐயா’ என்பவர் யார் என்று விளங்கவில்லை. பணியாளரிடம் கேட்பதும் சரியாகப் படவில்லை. ஒரு வகையாக வீட்டுக்கு வந்து