பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ♦ 25


சேர்ந்தோம். திண்ணையில் இருந்த வீட்டுக்காரரைப் பார்த்து, அந்தப் பணியாளர் எல்லையற்ற மரியாதையுடன் நடந்தவற்றையெல்லாம் கூறினார். அப்போதும் அவர் யார் என்று தெரியவில்லை. உள்ளே சென்று என் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறி, ‘அந்த வீட்டுக்காரர் யார்?’ என்று கேட்டேன். தந்தையார் “அட முட்டாள், பாரதியார் பாட்டெல்லாம் படிக்கிறாயே, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. என்ற பெயரைக் கேட்டதில்லையா?” என்றார். அந்தப் பெயரும், கப்பலோட்டிய தமிழர் என்ற சிறப்புப் பெயரும் நன்றாகவே தெரியும். ஆனால், அந்த வீட்டுக்காரர்தான் அவர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கப்பலோட்டிய தமிழன்பற்றி என் மனத்தில் இருந்த படம் வேறு. அதனால்தான் தொடக்கத்திலிருந்தே அவரைக் கண்டுகொள்ளவோ மரியாதை செய்யவோ நான் முற்படவில்லை.

தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மற்றைய ஊர்களைப் போலக் காலையிலும் மாலையிலும் அங்கு விழா நடைபெறாது. இரவு 9.30மணிக்குத் தொடங்கி, விடியற்காலை 3 மணி 3-30 மணிவரை நடைபெறும். காரணம் வருபவர் அனைவரும் வணிகர்கள். ஆதலால் கடையை மூடிவிட்டு இரவில்தான் வருவார்கள். இந்த நிலையில் ஒரு பிரச்சினை எழுந்தது. அன்று இரவு கூட்டத்திற்குச் சொற்பொழிவாளர்களைப் போடும்பொழுது “சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப் பிள்ளையைக் கடைசிப் பேச்சாளராகப் போட்டுவிடுங்கள்” என்றார் வ.உ.சி. எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், என் வாய் சும்மா இருக்கவில்லை. பிள்ளையவர்களைப் பார்த்து, ‘அது ஏன்?’ என்று நான் கேட்டேன். மிக அமைதியாக அவர் “பையா ரா.பி. அவர்கள் பேசிய பிறகு யாருடைய பேச்சும் எடுபடாது. அதனால்தான் நிகழ்ச்சியை இப்படி அமைக்கிறோம்” என்றார். கொஞ்சம்கூடச் சிந்திக்காமல் “அவர் என்ன