பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டிதர் நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ♦ 29


அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்றுச் சென்றுவிட்டார்கள். 1985இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இடைநிலை (intermediate) வகுப்பில் சேர்ந்துவிட்டேன். மறுபடியும் ஐயா அவர்களின் குடும்பத்தோடு பெரிதும் ஒன்றி வாழத் தொடங்கினேன். தனிப்பட்ட முறையில் சிவபூசை என்ற எதையும் ஐயா அவர்கள் செய்து நான் பார்த்ததில்லை.

1938இல் திருவாதிரை விழாவின்போது சிதம்பரத்தில் கூத்தப் பெருமானின் தேரோட்டம் வழக்கம்போல் நடைபெற்றது. அண்ணாமலை நகரிலிருந்து ஒரு ஒற்றை மாட்டு வண்டியில் ஐயா அவர்களை ஏற்றிக்கொண்டு, தேரோட்டம் பார்க்கச் சென்றோம். வண்டியை நான் ஓட்ட, நடராசனும் ஐயா அவர்களும் வண்டியினுள் அமர்ந்திருந்தனர். மாலை நேரம் தேரோட்டம் முடிந்து தேர் நிலைக்கு வந்துவிட்டது. எல்லா ஊர்களிலும் தேரை இழுப்பதற்கு தேர் வடம் என்று சொல்லப்பெறும் பெரிய கயிற்றைப் பயன்படுத்துவார்கள். ஆனால், சிதம்பரத்தில் நிலைமை வேறு. மிகப் பெரிய இரும்புச் சங்கிலிகளையே இதற்குப் பயன்படுத்துவார்கள். நாங்கள் சென்ற நேரம் சங்கிலிகள் கீழே கிடந்தன. கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தமையின் நடராசனும் நானும் கையைக் கோத்துக் கொண்டு, ஐயா அவர்களை நடுவே நிறுத்தி, மெள்ளக் கூட்டத்தினுள்ளே அழைத்துச் சென்றோம். கவனமாக ஓரிடத்தில் ஐயா அவர்களை நிறுத்தி, தேரின் மேலிருக்கும் கூத்தனைச் தரிசனம் செய்ய வசதி செய்து கொடுத்து விட்டோம். என்றாலும், கூட்டம் முன்னும்பின்னுமாக முட்டிமோதிக் கொண்டிருந்தமையின் நாங்களிருவரும் கைகோத்தபடியே ஐயா அவர்களைக் கூட்டம் இடித்து விடாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். எதிர்பாராத நேரத்தில் முண்டி வந்த ஒரு கூட்டம், ஐயா அவர்களைக் கீழே தள்ளிவிட்டது. எதிரே குப்பலாக இருந்த தேர்ச்சங்கிலியின்மேல் முகம் அடிபடும் முறையில் ஐயா