பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டிதர் நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ♦ 31


அமைதியே உருவாக வாழ்ந்தவர்கள் இப்பெரியோர். ‘தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்’ என்று பாரதி பாடியதன் உட்பொருளை ஐயா அவர்களிடம் நேரிடையாகப் பார்த்தேன். தேரிலிருந்த தில்லைக்கூத்தனை அவர்கள் வழிபட்டபொழுது ஒன்று நினைவிற்கு வந்தது. ஐயா அவர்கள் காலத்திற்கு 1200 ஆண்டுகள் முன்னர்ச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லைக் கூத்தனை எவ்வாறு தரிசனம் செய்தார் என்பதை ‘ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள’ (பெ.புரா.தடுத்தாட்252) என்று தொடங்கும் பாடல் மூலம் சேக்கிழார் பெருமான் பாடிச் சென்றார். அந்தப் பாடலின் விளக்கத்தை 1938இல் ஐயா அவர்கள் வழிபடும்போது காண முடிந்தது. செயற்கு அரிய செய்வார் பெரியர்’என்ற குறளுக்கும், ‘சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம்’ என்ற தாயுமானவப் பெருந்தகையின் கூற்றுக்கும் இலக்கியமாக வாழ்ந்தவர்கள் நாட்டார் ஐயா அவர்கள்.

குடும்பத்தில் ஏற்படும் எந்தச் சிக்கலையும், சுற்று வட்டாரத்திலுள்ள எந்தச் சிக்கலையும், ஐயா அவர்கள் காதிற் போட்டுக்கொண்டதே இல்லை. ஆனால், 1940இல் உண்மையான சிக்கலொன்று என்மூலம் ஐயாவிற்கு ஏற்பட்டது. பல்கலைக் கழகத்தில் என் காலத்தில் பி.எஸ்.சி படித்துக்கொண்டிருந்த இராஜம்மாள் என்பவரைத் திருமணம் செய்வதென்று முடிவு செய்துவிட்டேன். ஐயா அவர்களுக்கும் அந்தப் பெண்ணைத் தெரியும். என் தந்தையார் இவ்விஷயமறிந்து எனது எம்.ஏ. (M.A.) பரீட்சைக்குரிய பணத்தைக் கட்ட மறுத்துவிட்டார். அதுமட்டு மல்லாமல் மிக நெருங்கிய தோழராகிய நாட்டார் ஐயா அவர்களுக்கும், எவ்வித உதவியும் செய்ய வேண்டா என்றும் கடிதம் எழுதிவிட்டார். இதையறியாத நான் கடைசி நேரத்தில் நாட்டார் ஐயாவிடம் சென்று பணம் கேட்டேன். கண்களில் நீர் மல்க, “நீ பிறப்பதற்கு முன்பிருந்தே முதலியார் ஐயாவும் நானும் ஆழமான