பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32 ♦ நான் கண்ட பெரியவர்கள்


நட்புடையவர்கள். அவர்கள் விரும்பாத செயலை நானும் ஏற்றுக்கொள்ள முடியாது. உன் நிலையை நினைத்தால் மிகப் பரிதாபமாகத்தான் உள்ளது. என்றாலும், நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று கூறிவிட்டார்கள். அந்த இக்கட்டான நிலையை எவ்வாறு கடந்தேன் என்பதைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ரைட் ஆனரபிள் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியார்பற்றி எழுதும்போது விளக்கமாகத் தெரிவிப்பேன்.


7. ‘பாஷா கவிசேகரர்’-மகா வித்துவான்
ரா. இராகவையங்கார் சுவாமிகள்


இராமநாதபுரம் சமஸ்தானத்தில் பாஸ்கர சேதுபதி அவர்கள் ஆட்சிக் காலம். திரு. ரா.இராகவ ஐயங்கார், திரு. வேப்பத்துர் பிச்சு ஐயர் முதலான மாபெரும் கவிஞர்கள் அங்கிருந்தனர். இவர்களை ஆதரித்த பாஸ்கர சேதுபதியே மிகச் சிறந்த கவிஞர்; இரசிகர்.

இந்த மன்னருக்குப் பிறகு, திரு. ரா. இரா. அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மதுரையில் தங்கி, தமிழ்ச் சங்கத்தை வளர்த்துவந்தார். 1935இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராக அமர்ந்து, பணிபுரியத் தொடங்கினார். இதற்கு முன்னரே என் தந்தையாருடன் நானும் பல இடங்களில் சொற்பொழிவுக்குச் சென்றதால் சுவாமிகளை அறிந்திருந்தேன்.

ஒரு சுவையான நிகழ்ச்சி, மேலைச் சிவபுரி சன்மார்க்க சங்க ஆதரவில் ஒரு பெரு விழாவிற்கு ஏற்பாடாகியிருந்தது. திரு. ரா.இரா, திரு. சரவண முதலியார். திரு. ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியவர்கள் அவ்விழாவில் பங்கேற்றனர். எனக்கும் ஒரு சிறு பங்கு இருந்தது. என் தந்தையார் முதலில் பேசினார். பெரிய புராணத்தில் வெள்ளானைச் சருக்கத்தின் முதற்பாடலை எடுத்துக்கொண்டு, எத்தனை