பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாஷா கவிசேகரர் மகா வித்துவான் ரா. இராகவையங்கார் சுவாமிகள் ♦ 33


விதமாகப் பொருள் செய்யலாம் என்று ஒரு முக்கால் மணி நேரம் விரிவாகப் பேசினார். அடுத்துத் திரு. சுவாமிகளின் பேச்சு அமைந்திருந்தது. தந்தையார் முடித்துவிட்டு மெள்ள இடத்திற்குத் திரும்பினார். மேடைக்குச் செல்லவேண்டிய சுவாமிகள் தந்தையாரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு பலமான குரலில் “முதலியார் வைஷ்ணவத்திற்கு ஒரு சேக்கிழார் இல்லாமல் போய்விட்டாரே என்பதை இப்போது பெரிதாக உணர்கின்றேன்” என்று கூறினார். என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஒரு வேளை தந்தையார் கொஞ்சம் பூரிப்படைந்திருக்க வேண்டும். இதை உணர்ந்த சுவாமிகள் “முதலியார் எங்களுக்கு ஒரு குறைபோல உங்களுக்கும் குறையுண்டு. எங்களுக்குப் பெரியவாச்சான் பிள்ளை கிடைத்ததுபோல உங்களுக்கு ஒருவர் இல்லை என்பதை மறந்துவிட வேண்டா” என்று கூறிவிட்டுப் பேசுவதற்கு மேடைக்குப் போய்விட்டார்.

தந்தையார் எப்படி ஒரு பாட்டின் முதலிரண்டு அடிகளை வைத்துக்கொண்டு பெரியதொரு விளக்கம் தந்தாரோ, அதேபோலச் சுவாமிகளும் கம்பநாடன் கவிதையில் வரும் ‘நீரிடை உறங்கும் சங்கம்; நிலத்திடை உறங்கும் மேதி’ (கம்ப-37) என்ற ஒரே அடியை வைத்துக்கொண்டு, மிக விஸ்தாரமாகப் பேசி முடித்தார். சைவ இலக்கியங்களிலே பெரிதும் தோய்ந்திருந்த எனக்குக் கம்பநாடன் கவிதையில் ஒர் ஊக்கத்தை உண்டாக்கச் சுவாமிகளின் பேச்சு பேருதவி புரிந்தது.

1935 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் என்பவற்றை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டு மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றேன். இயற்பியலில் இயல்பாகவே எனக்கொரு ஈடுபாடு இருந்தது. அத்துறையின் தலைவராக இருந்த திரு. எஸ். ஆர். ராவ் இயற்பியல் ஆனர்சில் சேருமாறு