பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 ♦ நான் கண்ட பெரியவர்கள்


பாருங்கள் அவன் இப்பொழுது இயற்பியலில்தான் இருக்கிறான். நீங்களே விரும்பி ஒரு பாடம் எடுப்பதானால் அவன் தமிழுக்கு வருவான்” என்று கூறியவுடன், “சரி” என்று கூறிவிட்டுச் சுவாமிகள் போய்விட்டார். அவர் போன பிறகு நாவலர் அவர்கள் என்னைப் பார்த்து “டேய் சம்பந்தா! உன் வாலை எவ்வளவு அவிழ்த்துவிட முடியுமோ அவ்வளவு அவிழ்த்துவிடு பார்க்கலாம்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

ஏற்கனவே தமிழ் எம்.ஏ.யில் அப்துல் காதர் என்பவரும், மீனாட்சி சுந்தரம் என்பவரும் சேர்ந்திருந்தனர். மறுநாள் மாலை 4.30 மணி அளவில் நானும் வர, மூவரும் வகுப்பில் இருந்தோம். சுவாமிகள் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது அவரது பார்வை மிகவும் கெட்டிருந்தது. ஒரு பெரிய தடிக்கம்பை ஊன்றிக்கொண்டு வருவார். உள்ளே நுழைந்ததும் ஒவ்வொருவருடைய பெயரையும் கேட்டார். கடைசியில் “முதலியார் மகனே! இப்பொழுது என்ன பாடம்” என்றார். அப்துல் காதர் “திருக்குறள் பொருட்பாலின் முதல் அதிகாரம்” என்று பதிலளித்தார். சுவாமிகள் என்னைப் பார்த்து “நீ படி” என்றார். படை, குடி, கூழ், அமைச்சு என்று தொடங்கும் குறளையும், பரிமேலழகர் உரையையும் படித்தேன். அவர் முதலில் பேசிய வார்த்தை “முதலியார் மகனே பூஞ்சுதோடா? (புரிந்ததோ)” என்றார்.

பாரதியார் சொல்லியவை என் நினைவுக்கு வந்தன. உடனே ‘குறளையே புரிந்துகொள்ளாமல் வாயில் வந்ததையெல்லாம் எழுதி வைத்திருக்கிறார் பரிமேலழகர். இந்தக் கண்ணராவியில் புரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது?’ என்று கேட்டேன். பரிமேலழகரைத் தெய்வமாக எண்ணும் சுவாமிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி! “அட நீ என்ன சொல்றே” என்றார்.