பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 ♦ நான் கண்ட பெரியவர்கள்


ஒன்றும் தெரியாது. பிற்காலத்தில் திருவாய்மொழியை ஈடுபாட்டுடன் படிக்கச் சுவாமிகள் அன்று விதை விதைத்தார்.

அன்றைய வகுப்பு முழுவதும் என்னுடைய காலட்சேபமாகவே முடிந்துவிட்டது. மறுநாள் திடீரென்று துணைவேந்தருடைய கார் எமது விடுதிக்குள் வந்து நின்றது. இம்மாதிரி அவருடைய வண்டி அடிக்கடி விடுதிக்குள் வருவதுண்டு. அது ஏன் என்று பின்னர்த் துணைவேந்தரைப் பற்றி எழுதும்போது விரிவாகக் கூறுகிறேன். எனவே, வழக்கம்போல் வந்துள்ளது என்று எண்ணிக்கொண்டிருக்கையில் வண்டியின் ஓட்டுநர் நேரடியாக என்னுடைய அறைக்குள் வந்தார். துணைவேந்தர் என்னை அழைத்ததாகக் கூறினார். ஒன்றும் புரியாமல், ஏனென்று கேட்டேன். இராகவையங்கார் சுவாமிகள் துணைவேந்தருடன் பேசிக்கொண்டிருக்கையில் என்னை அழைத்துவருமாறு துணைவேந்தர் கட்டளையிட்டார் என்று ஓட்டுநர் கூறி முடித்தார். எதற்கென்று புரியாவிட்டாலும் அந்த வண்டியில் ஏறித் துணைவேந்தர் வீட்டிற்குச் சென்றேன்.

துணைவேந்தர் எனக்கு மிகவும் பழக்கமானவர். ‘அடே கம்மனாட்டி’ என்றுதான் என்னை அழைப்பார். உள்ளே நுழைந்தவுடன் இந்தச் செல்லப் பெயரில் என்னை அழைத்து “நேற்றுச் சுவாமிகளுக்கு ஏதோ பாரதி பாட்டுப் பாடிக்காட்டினாயாமே! அதைக் கேட்டுச் சுவாமிகள் மிகவும் உருகிப்போய்விட்டார். எங்கே அதைத் திரும்பிப் பாடு” என்றார். எதிரே அமர்ந்து பாடினேன். எதிரேயிருந்த இருவரும் பெருமூப்படைந்தவர்கள்; ஆனாலும் என்ன! இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தது. ஒருவர் தமிழறிஞர். உலகம் தலைமேல் வைத்துக் கொண்டாடும் மூதறிஞர்.