பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ♦ 57



இப்பிரச்சினைகளெல்லாம் தொடங்குவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே, ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலுடைய பன்னிரண்டு பேர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை பத்து மணிக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு (elocution class) என்ற ஒன்றைத் துணைவேந்தர் நடத்திவந்தார். அதில் பாலதண்டாயுதமும் நானும் முக்கியமான மாணவர்கள்.

அந்தக் காலகட்டத்தில் மகாத்மா காந்தி ‘ஹரிஜன்’ என்ற மாதமிருமுறைப் பத்திரிகையை நடத்திவந்தார். மகாகனம் சாஸ்திரியார் அவர்களின் ஆங்கிலப் புலமையை நன்கறிந்த மகாத்மா பத்திரிகை வெளிவருவதற்கு முன்பாக அச்சுக் கோத்து ஆங்கிலப் பிழை திருத்தம் செய்வதற்காகச் சாஸ்திரியார் அவர்களுக்கு அனுப்புவார். தாம் அதைத் திருத்திக்கொண்டு சனிக்கிழமை வகுப்புக்களில் அவற்றைப் படித்துக் காட்டுவார்.

முதலில் அதில் எழுதியுள்ள வாக்கியத்தைப் படித்துக் காட்டுவார். “இதில் ஏதேனும் பிழையுண்டா? இருந்தால் தெரிவிக்கவும்” என்பார். ஒன்றிரண்டு சமயங்களில் அவரிடம் பயின்ற காரணத்தால் நாங்களேகூட ஓரிரு பிழைகளைச் சுட்டிக்காட்டியதுண்டு, நாங்கள் சொல்வதும் பிழை என்பதைச் சிரித்துக்கொண்டே எடுத்துக் காட்டுவார். பிறகு தாம் திருத்தியதைப் படித்துக் காட்டுவார். பெரிய வெளிச்சம் போட்டுக் காட்டியதுபோல அந்தப் புதிய வாக்கிய அமைப்பு எங்கள் மனக்கண் முன்னர்க் காட்சியளிக்கும். இது வாலாயமாக நடைபெறுகின்ற ஒன்று.

இம்மாதிரிச் சமயங்களில் சாதாரண எட்டுமுழ வேட்டி ஒன்றைக் கட்டிக்கொண்டு, அரைக்கைச் சட்டை ஒன்றை அணிந்தபடிதான் துணைவேந்தர் வருவார். ஒரு சனிக்கிழமை துணைவேந்தர் வகுப்பினுள் நுழைந்தார். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்ததைக்