பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 ♦ நான் கண்ட பெரியவர்கள்


வண்ணம்’ என்ற இரு பதிகங்களையும் யார் பாடினார் என்று நினைக்கிறீர்கள்? இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களே இப்பதிகங்களைப் பாடினார்கள். அரைப் பவுனில் ‘ஓம்’ என்ற எழுத்துக்களுடன் புது முறையில் தாலி செய்து அதனை அணிவித்தேன்.

1942 செப்டம்பரில் என் மனைவியையும் பிறந்த ஏழுமாதமாகிய முதற் குழந்தையையும் அழைத்துக் கொண்டு மகாகனம் சாஸ்திரியார் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றேன். குழந்தையை அவர் திருவடிகளில் போட்டு இருவரும் வணங்கினோம். அதோடு அவர் எனக்குத் தந்திருந்த அறுபது ரூபாயையும் மேசைமேல் வைத்தேன். மாபெரும் அறிவாளியாகிய அவர் தாம் அன்போடு என்னை அழைக்கும் ‘கம்மனாட்டி’ என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. மனைவியோடும் குழந்தையோடும் வந்திருந்த என்னைப் பார்த்து இந்த சொல்லைச் சொல்வது சரியன்று என்று நினைத்தார்போலும். ‘என்னடா, நல்லா இருக்கியா’ என்று தொடங்கினார். நான் எதற்காக மேசைமேல் பணத்தை வைத்தேன் என்று புரிந்துகொண்ட அவர், பெருத்த சிரிப்புடன் அந்தப் பணத்தை எடுத்து, குழந்தையின் கையில் திணித்து விட்டார். உடனே எங்களைப் பார்த்து இந்தப் பணம் உங்களுக்குச் சொந்தமில்லை. இது நான் குழந்தைக்குக் கொடுத்தது. இதை அவன் பெயரில் போட்டு வையுங்கள் என்று ஆசி வழங்கினார். அந்த மகானின் ஆசியால் அன்று குழந்தையாய் இருந்த மகன் மெய்கண்டானோடு அனைவரும் நன்றாக இருக்கிறோம்.

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் அவர்கள் என்பால் கொண்ட அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என் திருமணமே சான்று. அறுபது ஆண்டுகள் கழித்தும் அந்த மாமனிதர் எனக்குச் செய்த உபகாரத்தை நன்றியுடன் நினைவு