பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ♦ 67


முடிகின்றவரை வெள்ளைக்கார கவர்னர் வளைந்து வணங்கியபடியே நின்றார். அதன்பிறகு, தம் பேச்சைத் தொடங்கிய கவர்னர், பேசிய முற்பகுதியின் சுருக்கம் வருமாறு:- ‘மகாகனம் ஐயா அவர்களே, நான் சிறுவனாக இருக்கும்பொழுது என் தந்தையாரைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்திருந்தீர்கள். அப்பொழுது என் தந்தையார் தங்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். என் வலக் காதைத் திருகிய நீங்கள் ’இளைஞனே, நீ நன்கு படித்து, இந்தியாவில் ஒரு மாகாணக் கவர்னராக வர வேண்டும்’ என்று என்னை ஆசீர்வதித்தீர்கள். உங்களுடைய ஆசீர்வாதம் பொய்யாகாமல், உங்களுடைய மாகாணத்திற்கே கவர்னராக வந்துவிட்டேன். மறுபடியும் என்னை ஆசீர்வதியுங்கள் என்று தம் முன்னுரையை முடித்துவிட்டுப் பிறகுதான், ‘ராஜா ஸ்ர் செட்டியாரவர்களே, துணைவேந்தர் அவர்களே!’ என்று விளித்துப் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கினார்.

வெள்ளைக்காரன் என்றால், அவர்கள் தெய்வப் பிறவிகள்; வெள்ளைக்கார கவர்னர் என்றால், அவர்கள் உலாவரும் தெய்வம் என்று கருதி வழிபாடு செய்யப்பட்ட அந்தக் காலத்தில் வெள்ளைக்கார கவர்னரை முதுகில் தட்டி ‘இளைஞனே எவ்வாறு இருக்கிறாய்?’ என்று கேட்ட ஒரு தமிழர் உண்டு என்றால், அவர்தான் மகாகனம் சீனிவாஸ சாஸ்திரியார் என்ற மாமனிதர். 65 ஆண்டுகள் ஆகியும் இந்தக் காட்சி என் மனத்தை விட்டு மறையவே இல்லை. ஆம், மகாகனம் சாஸ்திரியார் அவர்கள் ஓர் மாமனிதர் என்பதில் ஐயமே இல்லை. இத்தனைக்கும் அவர் ஒரு காங்கிரஸ்காரர்கூட அல்ல. அப்படியிருந்தும், இந்த மாமனிதர்கள் தேவை ஏற்படும்போது விஸ்வரூபம் எடுத்துக் காட்சி தருகின்றனர்.