பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


11. தமிழவேள் பி. டி. இராஜன்


இருபதாம் நூற்றாண்டில் அரசியல்வாதியாகவும், ஆன்மிக வாதியாகவும் இணைந்து விளங்கியவர் பி. டி. இராஜன் என்றும், பி. டி. ஆர் என்றும் அனைவராலும் அழைக்கப்பெற்ற பொன்னம்பலத் தியாகராஜன் அவர்களாவார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணம் என்பது ஆந்திர கர்நாடக மாநிலங்களின் பெரும்பகுதியையும் தமிழ்நாட்டையும் கேரளத்தின் ஒரு பகுதியையும் தன்னுள் அடக்கியிருந்ததாகும். 1920 முதல் 1937வரை சென்னை மாகாணத்தை ஆட்சிசெய்தது அன்று ஈடு இணையற்று விளங்கிய நீதிக்கட்சி என்பதாகும். அப்பொழுது காங்கிரஸ் கட்சி அதிகம் வளர்ச்சியடையாமல் இருந்தது. நீதிக்கட்சியினரை ‘ஆங்கிலேயர்கட்குத் தாளம் போடுபவர்கள்’ என்று நகையாடினரேனும் நீதிக்கட்சியினர் நாட்டுக்குச் செய்த நன்மைகள் மிகப்பலவாகும். இதற்கு ஓர் உதாரணம்:

அக்காலத்தில் வெலிங்டன் என்ற வெள்ளையர் சென்னை மாகாணத்தின் ஆட்சியாளராக இருந்தார். பனகல் அரசர் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி செய்து வந்தது. B&C மில் பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியிருந்தது. தொழிலாளர்களின் தலைவராக இருந்து அதனை வழி நடத்தியவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களாவார். கூட்டங்களில் ஆட்சிசெய்யும் நீதிக்கட்சியினரை வலுவாகச் சாடினார் திரு.வி.க. நீதிக்கட்சியின் தலைவராக சர்.பி. தியாகராஜச் செட்டியார்