பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அடைய முடிந்தது. கற்பகத்தை மனைவியாகப் பெற்றுவிட்டால் என்னதான் நடைபெறாது?

பி.டி.ஆரின் பல்வேறு பரிமாணங்களை இந்த உலகம் நன்கறியும். ஆனால் அவர் உள்ளவளர்ச்சியை, ஆன்மிக பரிமாணத்தை நான் அண்மையில் நின்று அறிய வாய்ப்புத் தந்தவள் அன்னை மீனாட்சியே ஆவாள்.

இதன் பிறகு, பழநி முதலிய பெருந்தலங்களின் குடமுழுக்குகளைப் பி.டி.ஆர். முன்னின்று நடத்தினாரென்றாலும் அன்னையின் குடமுழுக்கே அவர் செய்த திருப்பணிகளின் முடிமணியாகும்.

பெரியார் அண்ணா ஆகியோரின் கொள்கைகள் நாட்டில் எங்கும் பரவி வீறுகொண்டிருந்த காலத்தில், அவர்களுடன் இணைந்திருந்த நீதிக்கட்சியின் ஆணிவேராக இருந்தவர் பி.டி.ஆர் அவர்களேயாவார். ஆனாலும் ஒரு வேற்றுமை, ’கடவுளை நம்புகிறவன் முட்டாள்’ என்ற பெரியாரின் கூற்று தமிழ்நாட்டில் பெரும்பகுதியில் பரவியிருந்த காலத்தில் பி.டி.ஆர். அவர்கள் விடாமல் திருக்கோயில் வழிபாட்டையும், மக்கள் தொண்டினையும் அன்னதானத்தையும் செய்து வந்தார் என்றால், அதற்குரிய பலனை அன்னை கொடாமல் விட்டுவிடுவாளா? பி.டி.ஆரின் மூத்த மகனார் பி.டிஆர். கமலத்தியாகராஜன் பெரும் பொறியாளர், பெரும் இசைவாணர், காழிப்பிள்ளையாரின் யாழ்முரிப்பண்ணுக்கு விளக்கமெழுதி வெளியிடும் இசை விற்பன்னர். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தினந்தோறும் சிவ பூசை செய்வதையும், மாலையில் அன்னையின் திருக்கோயிலுக்கும் சென்று வழிபடுவதையும் தலைமைப் பணியாகக் கொண்டவர் கமலத்தியாகராஜன், பி.டி.ஆரின் முதல் மகனார் வேறு எவ்வாறு இருக்க முடியும்?