பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 ♦ நான் கண்ட பெரியவர்கள்


1941இல் இருந்து அவ்விழா மேலும் வளரத் தொடங்கியது. 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற மகாத்மாவின் கட்டளைக்கிணங்க, தேவகோட்டையிலும் காரைக்குடியிலும் பெரும் புயல் வெடித்தது. முழு மூச்சாக அதில் இறங்கிய கணேசன் தலைமறைவாகும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அப்படியிருந்தும் அவர் இல்லாமலேயே சிறிய அளவில் கம்பன் விழா நடைபெற்றது. 1940 முதல் 1985 வரை ஓராண்டுகூடக் கம்பன் விழாவில் நான் பங்கு கொள்ளாமல் இருந்ததில்லை.

சா.கணேசன் அவர்கள் வசதியோடு வாழும் நகரத்தார் இனத்தைச் சேர்ந்தவராயினும் 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் அவர் தலைமறைவான பிறகு, அவர் செல்வத்தில் பெரும் பகுதி அன்றைய காவல் துறையினரால் சூறையாடப்பட்டது. அவருடைய வீட்டில் மாட்டியிருந்த முப்பதுக்கும் மேற்பட்ட மின்சார விசிறிகள் ஒவ்வொன்றும் முக்கால் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அவருடைய மனைவியின் இரண்டு காரட் பெறுமானமுள்ளதும் அன்றைய விலையில் ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ளதுமான வைரத்தோடுகள் பத்து ரூபாவுக்கும் குறைவாக ஏலம் விடப்பட்டது. இதில் என்ன சிறப்பு என்றால், ஏலம் இட்டவர்களும் காவல் துறையினர்; ஏலம் எடுத்தவர்களும் காவல் துறையினர்.

எல்லாவற்றையும் இழந்தாலும் எஞ்சியுள்ள தம் வானாளைக் கம்பனுக்காகவே செலவிட்டார், சா.கணேசன் அவர்கள். அவருடைய பெருமுயற்சியால் பெளராணிகர் கையில் சிக்கியிருந்த கம்பநாடன் விடுதலையடைந்தான். வைணவர்களுக்கு உரியது என்று ஒதுக்கி வைக்கப்பெற்றிருந்த கம்ப இராமாயணத்தைத் தமிழர்கள் அனைவருக்கும் பொதுச் சொத்தாக்கினார், சா.க. அதன் பயனாக வைணவராகிய சீனிவாச ராகவன், சைவர்களாகிய அ.மு.சரவண முதலியார், டி.கே சிதம்பரநாத முதலியார், தொ.மு.