பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

வாதக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உடையவனாயிருப்பது என்னுடைய அகங்காரத்தின் காரணமாகவோ, ஆணவத்தாலோ அல்ல என்பதை இங்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அந்த முழு முதற் கடவுளுமல்ல! அதன் அவதாரமுமல்ல ! அதனோடு போட்டி போடுகிறவனுமல்ல ! எனவே, நான் நாஸ்திகக் கொள்கையைக் கொண்டதற்கு மேற்கூறியபடி எனது அகங்காரம் காரணமல்லவென்பது இதனால் தீர்மாணிக்கப்பட்டு விட்டது ஆயினும் இவ்விஷயத்தைப் பட்டவர்த்தனமாக உணர்த்தும் பொருட்டு நான் தகுந்த ஆதாரங்களைக் கொண்டு பல உண்மைகளைப் பரிசீலனை செய்ய விரும்புகிறேன்.

சிறு வயதில் கடவுள் பக்தனே

டில்லி வெடிகுண்டு வழக்கு சம்பந்தமாயும், லாகூர் சதி வழக்கு சம்பந்தமாயும் நடந்த விசாரணைகளின் போது எனக்கு ஏற்பட்டுள்ள பொதுஜன செல்வாக்கினால் நான் தகுதியற்ற தற்பெருமைக்கு—கொடிய அகங்காரத்திற்கு—இரையாகி விட்டேன் என்பது எனது நண்பர்கள் பலரின் அபிப்பிராயம். அவர்கள் கொண்ட இவ்வபிப்பிராயம் சரிதானாவென்று ஆராய்வோம். எனது நாஸ்திக உணர்ச்சி இவ்வளவு சமீபகாலத்தில் தோன்றியதன்று. பிறர் என்னைத் தெரிந்துகொள்ளாத சாதாரண வாலிபனாக இருந்த காலத்திலேயும் மற்ற எனது தோழர் பலருக்கு கடவுள் என்பதாக ஒன்று இருக்கிறது என்று தெரிவதற்கு முன்பேயும் தெய்வ நம்பிக்கையை விட்டு விட்டேன். இதை எனது தோழர்கள் அறியார். கல்லூரி மாணாக்கனாக மட்டும் இருக்கும் ஒருவன், நாத்திக உணர்ச்சியைத் தூண்டத் தகுந்த அவ்வளவு மிதமிஞ்சின அகங்காரத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாது. கல்லூரியில் வாசிக்கும்பொழுது நான் சில ஆசிரியர்களால் நேசிக்கப்பட்டேன். சிலரால் வெறுக்கப்பட்டேன். என்றாலும், நான் ஒருபோதும் மிகுந்த சுறுசுறுப்புடைய மாணாக்கனாகவோ, சதா படித்துக்கொண்டிருக்கும் பையனாகவோ இருந்ததில்லை அந்நாளில் அகங்காரத்தால் தலைகொழுக்கும் உணர்ச்சிகள் ஊட்டும் சந்தர்ப்-