பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

திட்டமெதுவும் அப்பொழுது எங்களுக்கு இல்லாதிருந்த காரணத்தால் உலகப் புரட்சி சம்பந்தமான பல திறப்பட்ட லட்சியங்களை ஆர அமர சீர் தூக்கிப் பார்ப்பதற்குப் போதுமான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது நான் அராஜகத் தலைவரான (Anarchist Lecder) பக்குனின என்பவரின் தத்துவங்களைக் கற்றேன். பொது உடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகச்சக்ராதிபத்திய ஆதிக்க இருள் அடர்ந்திருந்த தங்களுடைய நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்த கர்ம வீரர்களான லெனின், ட்ராஸ்கி இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூற்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ச்சி செய்தேன். அவர்கள் எல்லோரும் பச்சை நாத்திகர்களே.

பக்குனின் எழுதிய “கடவுளும் ராஜ்யழும்” (God and State) என்ற நூல் பூர்த்தி செய்யப்படாது துண்டு துணுக்குகளாக இருந்தபோதிலும், விசயத்தை வெகு ருசிகரமாக விளக்குகிறது. சில காலத்திற்குப் பின் நிர்லம்ப சாமியால் எழுதப்பட்ட ‘பகுத்தறிவு’ (Commen Sence) என்னும் புத்தகத்தையும் படிக்க நேர்ந்தது. அதில் நாத்திக வாதம் தெளிவுபடும்படியில்லாமல் ஒரு தினுசாகக் கூறப்படுகிறது. இந்த விசயமானது அந்தக் காலத்தில் எனக்கு மிக ருசிகரமானதாகி, எனது உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டு விட்டது. 1926-ம் ஆண்டு முடிவில், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, நடத்தி வரும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டுவிட்டேன். என்னுடைய இந்த தெய்வ நம்பிக்கையற்ற தன்மையை—நாத்திக வாதத்தை பகிரங்கப்படுத்தினேன். நான் இவ்விஷயங்களைப்பற்றி எனது தோழர்களோடும் விவாதிக்கத் தொடங்கினேன். அது என்னவென்பதைப் பற்றிக் கீழே விவரிக்கிறேன்.

கைது செய்யப்பட்டேன்!

1927-ஆம் ஆண்டு மே மாதம் நான் லாகூரில் கைது செய்யப்பட்டேன். கைது செய்யப்பட்டது தீடீரென