பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

தட்டிவிடப்படும் நிமிசமெதுவோ, அதுவே எனது இறுதி நிமிசம். அதுவே எனது வாழ்க்கையின் முடிவான நிமிஷம் இன்னும் விளக்கமாக வேதாந்த சாஸ்திரத்தின் சிறப்புச் சொற்களால் கூறினால், எனது ‘ஆத்மா’ எல்லாம் அக்கணமே முடிந்துவிடும். அதற்கப்பால் ஒன்றுமில்லை. இந்த நிகழ்ச்சியை நாஸ்திகக் கண்ணோடு பார்க்கும் தைரியம் எனக்கிருந்தால் “எத்தகைய மாபெரும் முடிவுமின்றி போராடிக் கொண்டிருந்த சிறிய ஜீவிதம்” தான் எனது வாழ்க்கையின் சன்மானமென்பது விளங்கும், அவ்வளவுதான்.

சுதந்திர சகாப்தம் உதயம்!

சுயநல உணர்ச்சியின்றி, இந்த வாழ்விலோ இதற்கப்பாலோ சன்மானிக்கப்படுவேன் என்ற ஆசையின்றி, பூரணமான தன்னல மறுப்புடன், சுயேச்சையடையும் பொருட்டு எனது வாழ்வை நான் தத்தஞ் செய்து விட்டேன். ஏனென்றால் எனக்கு இதைவிட வேறு மார்க்கமில்லை. இவ்வித மனோரதத்தோடு, ஆண் சிங்கங்களும், வீராங்கனைகளும் வேறெதிலும் திவலைக்கூடக் கவலை செலுத்தாமல், மனித வர்க்கத்திற்குத் தொண்டு புரிவதற்காக—கஷ்ட நிஷ்டூரத்திற்கும் கொடுமைக்கும் கொள்ளைக்கும் இரையாகி கண்ணீருங் கம்பலையுமாய்க் கதறும் ஏழை எளியவர்களின் விடுதலைப் போராட்டத்திற்காக எந்தக் காலத்தில் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணஞ் செய்து கொண்டு முன்னிலையில் வருகிறார்களோ, அந்தக் காலந்தான் சுதந்திர சகாப்தத்தின் உதயகாலமாகும். அவர்கள் உண்மை உணர்ச்சியும், ஊக்கமும், உத்வேகமும் கொண்டு கொடுமைப் படுத்துகின்றவரோடும். கொள்ளையடிக்கின்றவர்களோடும், கொடுங்கோலரோடும் கடுமையாகப் போர்த்தொடுப்பது, தாங்கள் மன்னாதி மன்னர்களாகலாமென்பதற்காகவோ அன்றி இப்பிறப்பிலோ, இறந்தபின் சொர்க்கத்திலோ போதிய சன்மானம் பெற்று, பூரிப்பும் இன்பமும் பொருந்தக் களிக்கலாமென்பதகாகவோ அல்ல. மற்ற மனித வர்க்கத்தின் கழுத்திலிருந்து அடிமை நுகத்தடியை இறக்கவும், சாந்தியையும் சுதந்திரத்தையும் ஸ்தாபிக்கவுமே.