பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வத்தில் (Immortality) நம்பிக்கைக் கொள்ளச் செய்து, அவனுடைய அய்ஸ்வர்யங்களையும், உடைமைகளையும் திருடிக் கொள்ளுங்கள். அவன் கொஞ்சமேனும் குரோதபுத்தியின்றி, இவ்விஷயத்தில் உங்களுக்கு ஒத்தாசை புரிவான். மதாச்சாரிகளுக்கும், அதிகார வர்க்கத்தாருக்கும் ஏற்பட்ட கூட்டுறவே, சிறைச்சாலைகளையும் தூக்குமேடைகளையும், கசையடிகளையும் பிறப்பித்தது” என்று.

கடவுள் ஒரு செங்கிஷ்கான்–வீழ்த்துங்கள் அவனை!

சர்வ சக்தனாகிய உங்கள் கடவுள் ஒரு மனிதன் பாவமோ, குற்றமோ செய்கிறபொழுதே ஏன் தடுத்து விடக்கூடாது என்றுதான் கேட்கிறேன். அவ்வாறு செய்வது அவனுக்கு எளிதான காரியந்தானே! யுத்தத் தலைவர்களான பிரபுக்களைக் கொன்றாவது அன்றி அவர்களுடைய உள்ளத்தில் கொழுந்து விட்டெறிந்த கலக நெருப்பை அவித்தாவது, அவன் ஏன் கழிந்த மகா யுத்தத்தால் உலக மக்களின் தலையில் விடிந்த ஆறாப் பெருந்துயரை—துரதிஷ்ட முடிவைத் தடுத்திருக்கக் கூடாது? இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்குமாறு ஓர் வகையான நல்லுணர்ச்சியைப் பிரிட்டிஷ்மக்களின் மனதில் ஏன் அவன் புகுத்தவில்லை? அவன் ஏன் சகல, முதலாளிகளின் ஹிருதயங்களிலும் பரோபகார உணர்ச்சியைக் கொளுத்தி தனி உடமைகளெல்லாம் அவர்களாலேயே பொது உடைமையாகும்படி செய்து, தொழிலாளர் சமூகத்தை அல்ல மனித வர்க்கம் பூராவையுமே அடிமைக் கட்டிலிருந்து விடுதலை செய்து காப்பாற்றாதிருக்கிறான்? சமதர்மிகள் கூறும் திட்டம் அனுபவ சாத்தியமாவென அறிய நீங்கள் விரும்பலாம். வேண்டுமானால் அதை அனுபவ சாத்தியமாக்க வேண்டிய பொறுப்பை சர்வ சக்தி வாய்ந்த உங்கள் கடவுளிடமே விட்டுவிடத் தயார். ஜனங்கள் பொதுவாக சமதர்மத்தின் யோக்கியதையையும் அதனால் ஏற்படும் நன்மையையும் அங்கீகரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் “அது அசாத்தியமானது” நடக்கக்கூடியதல்ல என்றுகூறிக் கொண்டு எதிர்க்கிறார்கள். எனவே எல்லாம் வல்ல இறைவன் இவ்விஷயத்தில் தலையிட்டு யாவற்றையும் முறைப்படுத்தி ஒழுங்கு செய்யக்கூடாதா? இப்பொழுது