பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

களை ஒழிக்கவே இக்காரியங்கள் செய்கின்றார்: திரு காந்தி ஒழியவேண்டும்; காங்கிரஸ் அழியவேண்டும்” என்று ஆகாயம்முட்ட கூப்பாடு போட்டுக்கொண்டும். இருந்தது யாவருக்கும் தெரியும்.

ஆனால், நமது “தேசிய வீரர்கள்”, “தேச பக்தர்கள்” என்பவர்கள் இவை ஒன்றையும் கவனியாமல், பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவது போலவும், பந்தயங் கூறிக்கொண்டு பாறையில் முட்டிக் கொள்வது போலவும் தலை கிறுகிறுத்துக் கண்தெரியாமல் கூத்தாடினார்கள். அதன் பயனாய்ச் சிறை சென்று வீரர்களாய் “வாகை மாலை சூடி” திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு, இப்போது பகத்சிங் தூக்கிலிடப் பட்டதைப் பார்த்துவிட்டு, “காந்தீயம் வீழ்க,” “காங்கிரஸ் அழிக,” “காந்தி ஒழிக” என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டு விடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

பகத்சிங்கின் திருப்தி

நிற்க, நம்மைப் பொறுத்தவரை நாம் உண்மையைச் சொல்லவேண்டுமானால், பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொறுப்பும், கவலையும் அற்ற மூட மக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்குக் கவுரவம் கிடைத்தால் போதுமென்கிற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு வினாடிதோறும் வேதனைப்பட்டு, இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர் தன் உயிரைவிட்டு மறைய நேர்ந்தது அவருக்கு—‘பகத்சிங்’கிற்கு மெத்த ‘சாந்தி’ என்றும், நன்மையென்றுமே கருதுகின்றோம். அந்தப்பேற்றை நாம் அடையமுடியவில்லையே என்றுகூட கவலைப்படுகிறோம்.

ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. என்றாலும், அக்கடமைகளைக் “காலமறிந்து, இடமறிந்து செலுத்த வேண்டும்” என்பதை நாம் நாம் ஒப்புக்கொள்ளுகின்றோ-