பக்கம்:நாயகர் பெருமான்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அன்பு மிக்க பெருமானை விட்டு அகல ஸைத் அவர்களுக்கு மனமில்லை. பெருமானுடனேயே தங்கி விட்டார்,

தம் மகன் அடிமையாக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை ஹாரிஸ் என்பவர், அவரைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்தார். பணங் கொடுத்து விடுதலை செய்வதற்காக வந்த அவர், தம் மகன் முன்பே விடுதலை பெற்றுவிட்ட செய்தியறிந்து மிக்க உவப்படைந்தார்.

தன் மகனைக் கண்டு, தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால், ஸைத் தன் தந்தையுடன் செல்ல மறுத்து விட்டார்.

“தந்தையே, நான் இனி என்றென்றும் பெருமானின் அடிமையாகி விட்டேன். அவர்களுடைய உயர்ந்த குணங்களும் மிகுந்த அன்பும் என்னை ஆட் கொண்டு விட்டன. நான் விலைக்குப் பெற்ற அடிமையல்ல; அன்பின் அடிமை” என்று கூறித் தன் தந்தையைத் திருப்பி யனுப்பி விட்டார்.

தன்பால் அன்பும் மதிப்பும் வைத்திருந்த ஸைத் அவர்களுக்குப் பெருமான் தன் அத்தை மகளையே திருமணம் செய்து கொடுத்து நல் வாழ்வு பெறச் செய்தார்,