பக்கம்:நாயகர் பெருமான்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

வெளியில் ஆளரவங் கேட்ட ஹஸரத் அபூபக்கர் அவர்கள், “இங்கே நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம். அவர்கள் நம்மைக் கண்டால் கொன்று போட்டு விடுவார்கள்” என்று கூறினார். ஆனால், பெருமானோ, “பயப்படாதீர்! நம்மோடு ஆண்டவனும் இருக்கிறான். அவன் நம்மைக் காப்பாற்றுவான்” என்று ஆறுதல் கூறினார்கள்.

உண்மையில் பகைவர்கள் குகை வாயிலுக்கு வந்த போது, வாயிலின் குறுக்கே ஒரு சிலந்திப் பூச்சி வலை கட்டியிருந்ததைக் கண்டார்கள். மனிதர்கள் குகைக்குள்ளே யிருந்தால், சிலந்திப் பூச்சியின் வலையைக் கலைக்காமல் உள்ளே போயிருக்க முடியாது என்று அவர்கள் எண்ணினார்கள். மேலும் குகைக்கு நேர் எதிரில் தாழ்ந்திருந்த ஒரு மரக் கிளையில் புறாக் கூடும், அதில் முட்டைகளும் இருந்தன. இக்காட்சிகளைக் கண்டு அவர்கள் அந்த இருட்டுக் குகைக்குள் நுழைவது வீண் வேலை யென்று கருதித் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.

12. விடுதலையின் விலை கல்வி

பத்ரு என்ற இடத்தில் குறைஷி இனத்தவர்கள் முஸ்லிம்களை எதிர்த்துப் போர் புரிந்தார்கள். ஆயிரம் போர் வீரர்களும் நூறு குதிரை வீரர்களும் அடங்கிய குறைஷிப் படையை இரண்டு குதிரை வீரர்கள் உட்பட முந்நூற்றுப் பதின் மூன்று பேரேயுடைய முஸ்லிம் படையினர் தோற்கடித்து வெற்றி பெற்றனர்.