பக்கம்:நாயகர் பெருமான்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அந்தப் போரில் தோற்றுப் பிடிபட்டு அடிமையான கைதிகளைப் பெருமானவர்கள் நடத்தியது போல் பெருந்தன்மையாக வேறு யாரும் நடத்தி யிருக்க முடியாது. சஹாபாக்கள் என்ற தம் தோழர் களிடம் ஆளுக்கு இரண்டு அல்லது நான்கு கைதிகள் வீதம் ஒப்படைத்து நல்ல விதமாய் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாயகத்தின் சொற்களை மதித்து நடக்கும் அந்த நல்லன்பர்கள், தம்மிடம் இருந்த ரொட்டியை யெல்லாம் கைதிகளுக்கு சாப்பிடக் கொடுத்து, தாங்கள் பேரீச்சம் பழத்தைத் தின்று வெறும் தண்ணீரைக் குடித்து விட்டு இருந்தார்கள். கைதிகளுக்கு உடுக்க உடையில்லாமல் இருந்த போது அந்த சஹாபாக்கள் தங்கள் ஆடைகளை எடுத்துக் கொடுத்தார்கள்.

கைதிகளை என்ன செய்வது என்ற பிரச்சினை வந்த போது பெருமானவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள்.

பகைவர்கள் யாவரும் பழகியவர்களாகவும் உறவினராகவும் இருப்பதால், ஏதாவது தொகை பெற்றுக் கொண்டு விடுவித்து விடலாம் என்று ஹஸரத் அபூ பக்கர் அவர்கள் கூறினார்கள். ஆனால் வீரமே மூச்சாகக் கொண்ட ஹஸரத் உமர் அவர்களோ, பகையென்று வந்தபின், உறவினன் அயலவன் என்று பார்த்துக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை; உறவென்று பாராமல் அவர்களைக் கொன்று விட வேண்டும் என்று கூறினார்கள்.