பக்கம்:நாயகர் பெருமான்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

படைகளைச் சாய்த்தவாறு வாளை வீசிக் கொண்டே முன்னேறிச் சென்ற இப்னு நலர் என்ற வீரர் வழியில் ஹஸரத் உமர் அவர்களைக் காண நேர்ந்தது.

மனத் தளர்ச்சியோடு, கை ஆயுதத்தை வீசி யெறிந்து விட்டு நின்று கொண்டிருந்த ஹஸரத் உமர் அவர்களை நோக்கி, “இங்கே ஏன் சும்மா யிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் இப்னு நலர்.

“நபிபெருமான் இறந்து விட்டார்களே இனிச் சண்டை செய்து என்ன பயன்?” என்று கேட்டார் ஹஸரத் உமர்.

அதை கேட்ட இப்னுநலர் “நபிபெருமான் இறந்த பின் நாம் உயிருடனிருந்து என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்டுக் கொண்டே எதிரிப் படையினுள் புகுந்தார். வீராவேசமாகப் போரிட்டுப் பல எதிரிகளைக் கொன்று ஒழித்த பின் அவர் உயிர் துறந்தார்.

போர் முடிந்தபின் அந்த வீரரின் உடலைப் பார்த்தபோது எளிதில் அடையாளங் கண்டுபிடிக்க முடியாத வண்ணம், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களும் குத்துக் காயங்களும் மலிந்துகாணப்பட்டன. இடைவெளியில்லாமல் புண்மயமாய்க் காட்சியளித்த அவருடைய உடலை, ஒரு விரலின் அடையாளத்தைக் கொண்டே இன்னார் என்று தெரிந்து கொண்டாராம் அவருடைய சகோதரி.