பக்கம்:நாயகர் பெருமான்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

யவர்கள் பெருமானின் கருத்தை அறிந்து அப் பல் குச்சியை வாங்கிக் கொடுத்தார்கள். பெருமானவர்கள் பல் விளக்கினார்கள். அடிக்கடி முகத்தைத் தண்ணீரினால் துடைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆண்டவன் நினைவாகவே யிருந்தார்கள்.

“அல்லா மேலான தோழனிடம்” என்று மும் முறை கூறினார்கள். அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போதே கைகள் அசைவற்றுப் போயின. கண்கள் மூடின. உயிர் புனித உலகம் நோக்கிப் போய் விட்டது.

அறுபத்து மூன்று ஆண்டுகட்கு முன் ரபிஉல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் நாள் திங்கட் கிழமை யன்று பிறந்த அவர்கள் அன்று ஹிஜிரி பதினோராம் ஆண்டு அதே மாதம் அதே நாள் அதே திங்கட் கிழமையன்று உயிர் துறந்தார்கள்.

அவர்கள் புனித உலகம் புகுந்த செய்தி காட்டுத் தீயைப் போல் நகரெங்கும் பரவிவிட்டது. மக்கள் யாவரும் பள்ளி வாசலில் வந்து கூடினார்கள்.

ஹஸரத் உமர் அவர்கள், கூட்டத்தின் மத்தியில் உருவிய வாளுடன் நின்று கொண்டு, யாராவது பெருமானவர்கள் இறந்து போனதாகச் சொன்னால் தலையை வெட்டிவிடுவேன் என்று அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். பெருமானைச் சாவு தீண்ட முடியாது என்பது அவருடைய எண்ணம்—நம்பிக்கை.