பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

நாயன்மார் கதை

கோயில் என்றே ஒரு பெயர் வழங்கும். மற்ற எல்லாக் கோயில்களிலும் சிறந்ததாதலால் அப்பெயர் பெற்றது. அத்தகைய சிறப்பைப் பெற்ற திருக்கோயிலில் இறைவனுடைய திருமேனியைத் தீண்டி வழிபடும் பேறு பெற்றவர்கள் என்றால், தில்லைவாழ் அந்தணர் பெருமை எவ்வளவு உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்!

“சுத்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடத் தொடங்கும்போது, ஆரூர்ப் பெருமான் தம்முடைய திருவாக்காலே கோத்த முதல் நாயனார் கூட்டமாக இருப்பவர் என்றால், இவர் பெருமை சொல்லி அளவிடத்தக்கதோ?” என்று சேக்கிழார் பாடுகிறார்.

“இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம்
        எல்லைத் தாமோ?
தென்றமிழ்ப் பயனா யுள்ள திருத்தொண்டத்
        தொகைமுன் பாட
அன்றுவன் தொண்டர் தம்மை அருளிய
        ஆரூர் அண்ணல்
முன்திரு வாக்கால் கோத்த முதற்பொருள் ஆனார்
        என்றால்.”

2. திருநீலகண்ட நாயனார்

தில்லை மாநகரில் இறைவனுடைய அடியார்களிடம் எல்லையிலா அன்புடையவராகி வாழ்ந்தவர் திருநீலகண்டர். சிவனடியார் உணவு ஏற்று உண்ணும் திருவோடுகளைச் செய்து செய்து அடியார்களுக்கு வழங்கும் சிறந்த தொண்டை அவர் செய்து வந்தார். இறைவன் தேவர்கள் அமுதை உண்ணுவதற்காகத் தான் நஞ்சுண்ட பெருங்கருணையை நினைந்து அப்பெருமானுடைய திருக்கழுத்தைப் போற்றித் திருநீலகண்டம் என்று சொல்லிப் பாராட்டுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/10&oldid=1405131" இலிருந்து மீள்விக்கப்பட்டது