பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநீலகண்ட நாயனார்

5


இத்தகைய பக்தர் இளமையின் மிடுக்கால் புறத்தொழுக்கம் உடையவராகி இருந்தமையால் அவருடைய மனைவியார் ஒரு நாள், “திருநீலகண்டத்தின் மேல் ஆணை; எம்மைத் தீண்டக்கூடாது” என்று சொன்னார். அதைக் கேட்ட நாயனாருக்கு உணர்வு உண்டாயிற்று. தாம் செய்த பிழையை நினைந்து இரங்கினார். தம்முடைய உள்ளத்தில் என்றும் மறவாமல் நினைக்கும் திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டுச் சொன்னமையால் அச்சொல் அவருக்கு மிக உறைத்தது. “இனி நான் உன்னைத் தீண்டுவதில்லை. எம்மைத் தீண்டக்கூடாது என்றமையால் பெண்குலத்தினர் யாரையுமே தீண்டுவதில்லை” என்று ஆணை கூறி அது முதல் காம இன்பத்தைத் துறந்து வாழ்ந்தார்.

இல்வாழ்க்கையில் மற்ற அறம் யாதும் தடையின்றி நடைபெற, கணவரும் மனைவியும் இன்பம் துய்க்காமல் வாழ்ந்தார்கள். இது புற உலகத்துக்குத் தெரியாமலே இருந்தது. இந்த விரதம் தவறாமல் வாழ்ந்து பல காலம் செல்ல, அவ்விருவரும் முதுமையை அடைந்தனர்.

அப்போது இறைவன் அவர்களுடைய பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு, ஒரு சிவனடியாராக வேடம் புனைந்து தன் கையில் ஓடு ஒன்று ஏந்தித் திருநீலகண்டரை நாடி வந்தான். அவனை வரவேற்று வேண்டிய உபசாரங்களை யெல்லாம் செய்தார் திருநீலகண்டர். அப்பால், “அடியேன் தேவரீர் திறத்துச் செய்யும் பணி யாது?” என்று கேட்டார். அடியாராகி வந்த சிவபெருமான் தன் கையில் உள்ள ஓட்டைக் காட்டி, “இது கிடைப்பதற்கரியது; விலை மதிப்பிடற்கரியது. இது போன்ற ஒன்றை மூவுலகத்தினும் பெற இயலாது. இதனை உம்மிடம் வைத்துச் செல்கிறேன். மீண்டும் வந்து கேட்கும்போது கொடுக்கவேண்டும்” என்று கூறினான். நாயனார் அப்படியே செய்வதாகச் சொல்லி அதை வாங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/11&oldid=1405132" இலிருந்து மீள்விக்கப்பட்டது